திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி ஒரு தொகுதிக்காக தான் பேசினேன் என்று கூறுவது சரியல்ல என்றும் உண்மைகள் கசக்கத்தான் செய்யும் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அண்புமணி குற்றச்சாட்டுக்கு விஷ்ணுபிரசாத் அதிரடியாக பதிலளித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாமகவை எப்படியாவது திமுக கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்றன.  இதற்கான முயற்சியை அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் பாமக திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்தது. இதனையடுத்து விஷ்ணுபிரசாத் பாமகவை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் கூட்டணிக்கான பணபேரம் நடந்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிருந்தார்.

  

மைத்துனர் விஷ்ணுபிரசாத்தின் இந்த பேச்சு எனக்கும், எனது மனைவிக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அன்புமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். மேலும் ஸ்டாலின் ஒருபடி மேலே போய், எனது உறவினரை வைத்து விமர்சனம் செய்துள்ளார். எங்களை எதிர்த்தால் தான் அவருக்கு ஒரு சீட்டு என்று கூறி இருப்பார்கள். அதற்கு 30 ஆண்டு கால பந்த பாசத்தை, குடும்பத்தை விட்டுக் கொடுப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். 

அன்புமணியின் கருத்து விஷ்ணுபிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். அதில் எனது தந்தையும், நானும் கடந்த மக்களவை தேர்தல்களில் இதற்கு முன்னர் பா.ம.க.வினரால் தோற்கடிக்கப்பட்டோம். அதனை அரசியலாகத்தான் பார்த்தேன். உறவாகப் பார்க்கவில்லை. மு.க.ஸ்டாலின் சொல்லி ஒரு தொகுதிக்காக தான் பேசினேன் என்று கூறுவது சரியல்ல.  

காங்கிரஸ் செயல் தலைவர் என்ற முறையில் ஒரு தொகுதிக்காக அல்ல, 40 தொகுதிகளுக்காகவும் பேசினேன். டாக்டராக இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சையின் வலி என்ன என்பது தெரியும், மருந்து என்றால் கசக்கத்தான் செய்யும். அதே போல உண்மைகள் கசக்கத்தான் செய்யும் என விஷ்ணுபிரசாத் அன்புமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.