vishal nomination was rejected by ro of rk nagar
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்த நடிகர் விஷாலின் வேட்புமனு இன்று பகல் நிராகரிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ய முன்மொழிந்த பத்து பேரில், இருவரது கையெழுத்துகள் போலியானவை என்றும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளை விஷால் மறைத்துள்ளார் என்றும் செய்திகள் பரவின.
இதனிடையே, தேர்தல் அதிகாரி விஷால் வேட்பு மனு நிராகரிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டதில் சதி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. திட்டமிட்டு விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என அவரது ஆதரவாளர்கள் குமுறினர்.
இதனிடையே, என்னை முன் மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது என்றார் விஷால்! விஷாலை முன்மொழிந்த வர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார்.
வேட்பு மனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களை மிரட்டி, எனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்துள்ளனர் என்று அவர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தார். பின்னர், இது குறித்து
முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அது வரை என் மனு மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் விஷால் கூறினார்.
இதனிடையே, விஷால் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவலர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர் காவலர்களுடன் சென்று, தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து, ஆடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை அளித்தார். மேலும், மற்ற வேட்பாளர்களை முன்மொழிந்தவர்களை ஏன் நேரில் அழைத்து விசாரிக்கவில்லை என்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் அடிப்படையில், அவரது வேட்பு மனு ஏற்கப் படுவதாக தேர்தல் அலுவலர் வேலுசாமி அறிவித்தார்.
இதனிடையே விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,
உண்மைக்கு புறம்பாக விஷால் பேசி வருகிறார் என்று,
ஆடியோவில் விஷால் புகார் கூறும் மதுசூதனன் தரப்பைச் சேர்ந்த ராஜேஷ் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், விஷால் மனு ஏற்கப் படுவதாக அறிவிக்கப் பட்டதை அடுத்து, விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் முன்பு அதிமுகவினர் மற்றும் ஜெ.தீபா ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும்,
வேட்புமனுவை நிராகரித்து பின்னர் ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இந்நிலையில், நியாயம், நீதி, நேர்மை வென்றது என்று நடிகர் விஷால் பேட்டி அளித்தார். தேர்தலை நேர்மையாக சந்திப்பேன் என்று கூறிய அவர், வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்தே போராட்டத்தை மட்டுமே சந்தித்தேன் என்றார்.
இதனிடையே, விஷாலை முன்மொழிந்த இருவரும் நேரில் ஆஜராகி, தாங்கள் அவரை முன்மொழியவில்லை என்று கூறியதால், வேட்புமனு நிராகரிப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகார பூர்வமாக அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
