மிகப்பெரிய பில்டப்புகளுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின் துவக்கிய நிலையில் இரண்டே நாளில் பிசுபிசுத்துவிட்டது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. ஸ்டாலினை முதலமைச்சராக்க பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீமுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் உதயநிதி ஸ்டாலின் தனக்கான விளம்பர மற்றும் பிஆர்ஓ டீமை தனியாக பணிக்கு அமர்த்தியுள்ளார். அந்த டீமில் உள்ளவர்கள் ஆலோசனைப்படி தான் தேர்தல் பிரச்சாரத்தை அவர் துவக்கியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு கடந்த மாத இறுதியிலேயே ஸ்டாலினிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஸ்டாலின் அவசரப்பட வேண்டாம் என்று கூறி உதயநிதியை பிரச்சாரத்திற்கு புறப்பட அனுமதிக்கவில்லை. ஆனால் சுமார் ஒரு மாத கால முயற்சிக்கு பிறகு ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்தார். இதனை அடுத்து ஒரு நிமிடமும் தாமதிக்காமல் தங்களின் பூர்வீக கிராமமான நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தங்கள் பூர்வீக வீட்டில் இருந்து உதயநிதி பிரச்சாரத்தை துவக்கினார்.

இதற்கு முன்பு கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் இதே போல் திருக்குவளையில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அந்த சென்டிமென்டில் உதயநிதியுடம் பிரச்சாரத்தை அங்கிருந்து துவக்கியதாக சொல்கிறார்கள். மிக மிக குறைவான கால அவகாசத்தில் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் இணைந்து மேற்கொண்டிருந்தனர். உதயநிதி வருகை தருவதால் இரண்டு மாவட்டங்களில் இருந்தும் திருக்குவளைக்கு காலை முதலே திமுக தொண்டர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

திருக்குவளையில் தனது தாத்தா கருணாநிதியின் தாய் – தந்தையரை வணங்கிவிட்டு உதயநிதி பிரச்சாரத்தை துவக்கினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் உதயநிதி பேச வருவதற்கு முன்னரே பலர் காணாமல் போய்விட்டனர். மேலும் உதயநிதி மேடைக்கு அருகே வந்த போது உரிய அனுமதியின்றி கொரோனா காலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூறி அவரை கைது செய்து அருகே உள்ள மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். பிறகு சிறிது நேரத்தில் அவரை விடுதலையும் செய்துவிட்டனர்.

இதனால் முதல் நாள் பிரச்சாரத்தை உதயநிதியால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்களை அழைத்து உதயநிதி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட தலைமை உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் அமர்ந்தனர். மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என ஆங்காங்கே திடீர் திடீர் என சாலை மறியலில் உட்கார்ந்தனர். சென்னையை தவிர பிற மாவட்டங்களில் இந்த சாலை மறியலில் பெரிய அளவில் கூட்டம் இல்லை.

மேலும் கொரோனா என்பதால் வழக்கமாக திமுக போராட்டங்களில் பங்கேற்கும் நிர்வாகிகள் கூட வீட்டில் அமர்ந்து கொண்டனர். இருந்தாலும் தலைமை அழைத்து சொல்லிவிட்டதே என்று சில மாவட்டச் செயலாளர்கள் ஆங்காங்கே இருந்த திமுகவினரை திரட்டி மறியலில் ஈடுபட்டனர். இப்படி மறியல் செய்தவர்களும் ஏனோ தானோ என்று ஏதேதோ முழங்கிக் கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் எடப்பாடியை விடுதலை செய் என்று திமுகவினர் முழக்கம் இட்டது  தான் ஹைலைட். முதல் நாள் பிரச்சாரம் இப்படி முடிந்தது.

மறுநாள் வேதாரண்யம் பகுதியில் உதயநிதி பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மீனவ மக்களை சந்தித்து பேசவும் ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் முன்கூட்டியே உதயநிதி கூட்டத்திற்கு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் மிரட்டி விட்டுச் சென்றதாக கூறுகிறார்கள். இதனால் திமுகவினர் எவ்வளவோ அழைத்தும் மீனவ மக்கள் உதயநிதியை சந்திக்கவரவில்லை. இதனால் தான் படகில் சென்று மீனவர்களை சந்திப்பதாக கூறி ஒரு படகில் உதயநிதி ஏறினார்.

ஆனால் அதுவும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. பிறகு வழக்கம் போல் அனுமதியின்றி பிரச்சாரம் என்று கூறி உதயநிதியை போலீசார் கைது செய்தனர். முதல் நாள் உதயநிதி கைது செய்த போது பிரேக்கிங் நியுஸ் போட்ட செய்தி தொலைக்காட்சிகள் இந்த முறை அமித் ஷா சென்னை வருகை செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து நின்றுவிட்டன. திமுக தலைமை தரப்பில் இருந்து எவ்வளவோ முயன்றும் எந்த தொலைக்காட்சியும் (சன் டிவியை தவிர) உதயநிதி கைதை பெரிதுபடுத்தவில்லை.

மேலும் முதல் நாளைப்போல் பெரிய அளவில் எங்கும் சாலை மறியலும் நடைபெறவில்லை. ஆங்காங்கே நடைபெற்ற சாலை மறியலிலும் 10 பேர் 20 பேர் வந்து உட்கார்ந்து திமுகவின் மானத்தை வாங்கினர். இப்படி இரண்டே நாளில் பிரச்சாரம் பிசுபிசுத்த நிலையில் அதனை சுறுசுறுப்பாக்க உதயநிதி டீம் தீவிர யோசனையில் உள்ளதாம்.