Vindhya letter to CM Edappadi Palanasamy

மறைந்த ஜெயலலிதா மீது அளவுகடந்த மதிப்பும் பிரியமும் வைத்திருந்தவர் நடிகை விந்தியா, அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்து வந்தவர். விந்தியாவை தேர்தல் காலங்களில் பயன்டுத்திக்கொள்ள ஜெயலலிதா கூறியிருந்தால். ஆனால், ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு, அரசியலைவிட்டே ஒதுங்கியிருந்தார் விந்தியா.

விந்தியாவுக்கு, ஆந்திராவில் மாம்பழ தோட்டம் உள்ளது. இங்கு விளையும் மாம்பழங்களை ஜெயலலிதாவுக்காக ஆண்டுதோறும் விந்தியா அனுப்பி வைப்பார். ஜெயலலிதா மறைவை அடுத்து, மாம்பழங்களை, ஜெயலலிதா சமாதியில் வைத்து அஞ்சலியும் செலுத்தினார். கடந்த ஓராண்டாக அரசியலில் இருந்தே ஒதுங்கியிருந்த விந்தியா, முதன் முறையாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே என்று கேட்கத் துடிக்கும் நேர்மையான தொண்டர்களில் நானும் ஒருத்தி. எடப்பாடியாருக்கு இத்தனை பெரிய இடமா என்று ஏளனப் பார்வை பார்த்தவர்களில் நானும் ஒருத்தி. அம்மாவைத் தவிர வேறொன்றும் அறியாத விசுவாசிகளில் நானும் ஒருத்தி. இரட்டை இலையே இதயத்துடிப்பாக எண்ணிய அ.தி.மு.க பக்தைகளில் நானும் ஒருத்தி. 

கழகம் இரண்டுபட்டதால் கலங்கி நின்ற கணக்கற்ற தொண்டர்களில் நானும் ஒருத்தி. கூவத்தூர் கூத்துகளால் மனம் நொந்த மக்களில் நானும் ஒருத்தி. இப்படி எத்தனையோ எதிர்மறை கருத்துகளால் மனம் வெறுத்தவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தாலும், இன்று என் மனம் எனை அறியாமல் உங்களைப் பாராட்டி எழுதச் சொல்கிறது. 

அம்மாவின் பிள்ளைகள் இனி அநாதை பிள்ளைகள் என எதிரிகள் ஏளனம் செய்யும்போது தாயை இழுந்து தவிக்கும் எங்களுக்கு தமையனாய் வந்தாய், அம்மாவின் ஆட்சி காத்து தைரியம் தந்தாய். நீங்கள் ஏறி வந்த படிக்கட்டுக்களோ தாண்டிவந்த, தகர்த்துவந்த தடைகற்களோ வழிகளோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாளைக்கு கலைத்துவிடுவோம் என்று வேளைக்கு அறிக்கைவிடும் கழக எதிரிகளிடமிருந்து இயக்கத்தையும் இரட்டை இலையையும் கட்டிக்காத்த பெருமை உங்களுக்குண்டு.

தலையில் நீங்கள் கிரீடம் சுமந்து தலைவனாய் உருப்பெற்று ஒரு வருடம் உருண்டோடிவிட்டது. சற்று உற்றுப்பார்பவர்களுக்குத்தான் தெரியும் இது சுகவாசமா; இல்லை வனவாசமா என்று. உங்கள் உயரம் கண்டு உள்ளெரிச்சல் படுபவர்களுக்குத் தெரியாது நீங்கள் ஏறி நிற்பது ஈட்டியின்மீது என்று. செயற்கை போராட்டங்கள், இயற்கை இடர்ப்பாடுகள், விஷத் துரோகக் கூட்டங்கள் விலைபோன நண்பர்கள் என மாறி மாறி அடித்தாலும் அசராமல் அம்மாவின் அரசாற்றினீர்கள். 

தலைவர்கள் இடையே தலைவனாய் இருப்பது சாதாரண செயல் அல்ல. வலிகளைத் தவிர்க்க முடியாவிட்டாலும் வேதனைகளை வெளிக்காட்டாமல் நீங்கள் நடத்திய இந்த ஒரு வருட ஆட்சி உங்கள் திறமைக்கு சாட்சி. வாழ்த்துகின்றேன் முதல்வரே! அம்மாவின் ஆட்சி தொடரட்டும்; ஏழை மக்களின் முகம் மலரட்டும். இரட்டை இலை இருக்கும் பக்கம் இயக்கம் இருக்கும். இயக்கம் இருக்கும் பக்கம் அ.தி.மு.க தொண்டர்களின் இதயம் இருக்கும். உங்கள் வெற்றிப் பயணம் தொடர விரும்பும் அன்பு தொண்டர்களில் நானும் ஒருத்தி என்று விந்தியா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.