Village people seige to pannerselvam well

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் கிராமத்தின் குடிநீர் பிரச்சனைக்கு காரணமான முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. மேலும் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தில் ஒபிஎஸ்க்கு சொந்தமான ராட்சத கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மிகுந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ள ராட்சத கிணறு தான் எனவும், அது முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு சொந்தமானது எனவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று ஓபிஎஸ் தோட்டத்தை நோக்கி படையெடுத்து கிணற்றை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்துசெல்ல மறுத்ததால், போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.