அரியலுர் அருகே கோவிந்தபுரம் அரசு பள்ளிக்கு குடியரசு தினத்தையொட்டி கொடியேற்ற வந்த ஆசிரியர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமையாசிரியர் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ஆசிரியர் வேலை நிறுத்தம் தொடங்கியது முதல் இப்பள்ளிக்கு எந்த ஆசிரியரும் வரவில்லை. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் நேற்று குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியேற்ற வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து தலைமை ஆசிரியரை கொடி ஏற்ற விடாமல் தடுத்து ஆசிரியர்களை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கிராம மக்களை சமாதானப்படுத்தினார்.
அப்போது கிராம மக்கள் ஏழை மாணவர்களின் கல்வியை பற்றி கவலைப் படாமல் சுயநலத்திற்காக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்றும், 24 மணி நேரமும் சுயநலம் இன்றி காவல் பணியில் ஈடுபடும் தாங்கள் தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கூறினர்.
கிராம மக்களின் வேண்டுகோளை தொடர்ந்து பள்ளியில் தேசியக்கொடியை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். ஆசிரியர்கள் கொடியேற்ற வந்ததை தடுத்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 28, 2019, 6:58 PM IST