முத்தலாக் தடைச் சட்டம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றபோது, இதை கடுமையாக எதிர்த்ததுடன், பாஜக அரசுக்கு சாபமிட்டவர் அன்வர் ராஜா. இந்த சட்டம் இறைவனுக்கு எதிரானது. இதை நிறைவேற்நினால் இந்த ஆட்சி காணாமல் போகும் என மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசினார்.

இதே போல் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைய பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றபோதும் அதை கடுமையாக எதிர்த்தார். இப்படி இருந்த அன்வர் ராஜா திடீரென மாறத் தொடங்கினார்.

ஒரு நாள் திடீரென ராமநாதபுரம் தொகுதியில் நின்று தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக யாகம் வளர்த்தார். இதையடுத்து இஸ்லாமிய  மரபுகளுக்கு எதிராக செயல்பட்டதாக அவரது ஆதரவாளர்கள்  அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அன்வர் ராஜாவை உடனே வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக அவருக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அன்வர் ராஜா , தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்கத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுதான்" என்று அப்பட்டமாகவே சொன்னார்.

இப்படி தொடர்ந்து மாறி மாறி சர்ச்சை ஏற்படுத்தி வரும் அன்வர் ராஜாவினால் அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தான் பாம்பன் தெற்குவாடி பகுதியில் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்வர்ராஜா காரில் வந்து இறங்கினார். ஆதரவாளர்களுடன் வந்த அன்வர்ராஜாவை அங்கிருந்த மக்கள் சுற்றி வளைத்து கொண்டனர்.

அப்போது , எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்? இங்க எதுக்கு வர்றீங்க, அப்படியே கிளம்பி போயிடுங்க.. கட்சியில சீனியர்னு இருக்கிறவரைக்குதான் மரியாதை தருவோம் என்று கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர். இதைப் பார்த்த  அன்வர்ராஜாவின் ஆதரவாளர்கள் அப்பகுதி மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடும் எதிர்ப்பு காரணமாக  அன்வர் ராஜா அவர் வந்த காரிலேயே திரும்பி சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.