விக்கிரவாண்டி, நாங்குநேரி இருதொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக. மாபெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இதனையடுத்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நலகுறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 21-ம் தேதி நடைபெற்றது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வன் போட்டியிட்டனர். இந்த இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

இதனிடையே, தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று அ.தி.மு.க. மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அதிரடியாக கூறியுள்ளார். மேலும், இடைத்தேர்தல் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது திமுக தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்துள்ளது.