சட்டமன்ற தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தற்போது அதிமுக கூட்டணியில்தான் அங்கம் வகித்து வருகிறோம் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கடந்த 3ம் தேதி அதிரடியாக அறிவித்தார். தமிழர்களுக்காக தனது உயிரே போனாலும் பரவாயில்லை. சந்தோஷம்தான் என்ற ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வந்து வெற்றிபெற்றால் அது மக்களின் வெற்றியாக இருக்கும். தோல்வியடைந்தால் அது மக்களின் தோல்விதான் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று 70வது பிறந்தநாளை நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடினர். வாழ்த்து கூற அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். ஆனால், பிறந்தநாள் அன்று ரசிகர்களைக் கூட ரஜினி சந்திக்கவில்லை என்று ஒரு விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில், சென்னையில் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ரஜினிகாந்த் மீது மிகப்பெரிய மதிப்பு உள்ளது. அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி பிறந்தநாளன்று மக்களை கூட சந்திக்கவில்லை. ஆகவே, அவர் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன்பிறகு நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன் என்று ரஜினியின் அரசியல் வருகை குறித்து விஜய் பிரபாகரன் கூறியுள்ளார். 

மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தற்போது அதிமுக கூட்டணியில்தான் அங்கம் வகித்து வருகிறோம். 3வது அணிக்கு வாய்ப்பிருந்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம்.  சட்டமன்ற தேர்தல் தோல்வி பயத்தால் திமுக முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது என விமர்சித்தார்.