vijaybaskar argues with edappadi palanisamy

ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த விகாரத்தில் தப்ப முடியாமல் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறையின் சோதனையில் பல்வேறு ஆவணங்களில் உள்ள ஆதாரத்தால் மிகவும் மனஉளைச்சலில் உள்ளார்.

ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறையினரிடம் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீக்கம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக(அம்மா) அணி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து விசாரனையால் திணறியுள்ள விஜயபாஸ்கரை மீண்டும் வரும் திங்கள்கிழமை ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லியில் இருந்து நெருக்கடி தரப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், விஜயபாஸ்கரை நீக்காவிட்டால் தமிழக அரசுக்கே ஆபத்து என தம்பிதுரை மூலமாக எடப்பாடி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து விஜயபாஸ்கரை ராஜினாமா செய்யும் படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார். ஆனால் தினகரனோ என்ன ஆனாலும் பரவாயில்லை, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய இதுதான் சரியான தருணம் யாரை வேண்டுமானாலும் கைது செய்யட்டும் விஜயபாஸ்கர் பதவி விலக கூடாது என பழனிசாமிக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.

தினகரனின் இந்த முடிவால் முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எப்போது வேண்டுமானாலும் போர்க்கொடி தூக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் நேற்று தம்பிதுரையை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இன்று தினகரனை தம்பிதுரை சந்தித்து அமைச்சர்கள் தன்னிடம் கூறியதை அவரிடம் தெரிவித்தார்.

தற்போது பாஜக தரும் அரசியல் நெருக்கடியை சமாளிக்க விஜயபாஸ்கர் தாமாக பதவி விலகினால் நமக்கு நல்லது என எடப்பாடி எண்ணினாராம் அதேபோல ஆட்சியை காப்பாற்ற ஏறு வழியே இல்லை என்று தம்பிதுரை விளக்கினாராம்.

ஆனால் விஜயபாஸ்கரோ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என்னை அப்படி டிஸ்மிஸ் செய்தால் விளைவு வேறுமாதிரி இருக்கும் என எடப்பாடியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளாராம்.