எதோ மூன்று வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்டது மட்டும் அல்ல நமது கழக கொடி. அந்த வர்ணங்களுக்கு பிறகு நமது கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாகும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சிகலைஞர் விஜயகாந்த் ரசிகர் மன்றம் அமைத்து, அதன் மூலம் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, நமது ரசிகர் மன்றம் எல்லா தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் நற்பணி இயக்கமாக செயல்பட்டு வந்த வேளையில், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க 2000 ஆம் ஆண்டு புரட்சிதீபம் தாங்கிய மூவர்ண கொடியை, ரசிகர் நற்பணி மன்றத்திற்காக பிப்ரவரி 12 ஆம் நாள் நான் அறிமுகபடுத்தினேன். இந்த கொடியை தமிழகம் முழுவதும், பட்டி தொட்டி எங்கும் பறக்கவிட்டு சாதனை நிகழ்த்தியது நமது ரசிகர் நற்பணி மன்றங்களும், அதன்பிறகு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் என்பதில் பெருமைகொள்கிறேன். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் செப்டம்பர் 14 ஆம் தேதி உதயமானபோது, நமது நற்பணி மன்ற கொடி கழக கொடியாக மாற்றப்பட்டது. எதோ மூன்று வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்டது மட்டும் அல்ல நமது கழக கொடி. அந்த வர்ணங்களுக்கு பிறகு நமது கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாகும்.

சிகப்பு நிறம்-: 
 
இந்த வர்ணம் எதை குறிக்கிறது என்றால் சாதி, மதம், இனம், மொழி என்று எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் இரத்தத்தால் ஒன்று பட்டவர்கள், ஒன்றே குலம், ஒரே இனம் என்பதை வலியுறுத்தும் நிறம் ஆகும்.

மஞ்சள் நிறம்-:
 
வளமான தமிழகத்தை உருவாக்கி அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை நிரூபித்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று வளமான தமிழகத்தை மங்களகரமாக உருவாக்குவதே மஞ்சள் நிறம் ஆகும்.

கருமை நிறம்-:
 
வறுமை, இலஞ்சம், ஊழல் என்ற இருள் தமிழகத்தை சூழ்ந்துள்ளதை குறிக்கும் நிறமே கருப்பு ஆகும்.

புரட்சிதீபம்-:
மூவர்ண கொடியின் மையத்தில் அமைந்துள்ள புரட்சி தீபம் தமிழகத்தில் உள்ள இருளை அகற்றி, மாற்றத்தை உருவாக்கி நல்லதொரு மக்களாட்சியை கொண்டு வந்து, புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை ஒளி மயமாக்குவோம் என்பதை குறிப்பதாகும். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்து, நீல புரட்சி ஏற்படுத்தி விவசாயத்தையும், தொழில்களையும் மேம்படுத்துவோம் என்பதை குறிப்பதாகும்.


 
எனவே தமிழக மக்களுக்காக உயர்ந்த எண்ணத்தோடு, இலட்சியத்தோடு உருவாக்கப்பட்டது நமது கழக கொடி. நமது கழக கொடி தமிழகம் முழுவதும் பட்டொளி வீசி பறந்து தமிழகத்தின் முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. எனவே தெய்வத்தின் ஆசிர்வாதத்தோடும், மக்களின் பேராதரவோடும், நம் கழகம் தமிழகத்தில் பல புரட்சிகளை நிகழ்த்த கழக தொண்டர்களும், பொதுமக்களும்  ஒன்றுபடுவோம். இந்த இனிய கொடி நாளில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை, எளிய பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தும், தமிழகம் முழுவதும் பழைய கொடி கம்பங்களை புதுப்பிக்கவும், புதியதாக கொடி கம்பங்கள் உருவாக்கிடவும், இந்த இனிய கொடி நாளில் கழக தொண்டர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.