கடந்த தேர்தல்களில் சந்தித்த தொடர் தோல்விகளால் பெரும் பின்னடைவை சந்தித்த, தேமுதிக, தலைமை, நாடாளுமன்றத் தேர்தலில், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக, பலமான கூட்டணியில் இணைவதற்கு, அக்கட்சி காய் நகர்த்தி வருகிறது. கூட்டணி பேச்சுகளை நடத்துவதற்கு, தேமுதிக, தரப்பில், குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட, மாநில நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளனர். இக்குழுவினர், இதுவரை வெளிப்படையாக, எந்த கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை. அதிமுக, - பிஜேபி, - அமமுக, கட்சிகளுடன், ரகசிய கூட்டணி டீல் பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். பிஜேபி, - அதிமுக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த கூட்டணியில் இடம்பெறுவதாக சொல்லப்படும் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் நிலவரம் இன்னும் தெரியவில்லை.

இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில், தேமுதிக மற்றும் பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க, அதிமுக, தலைமை, இன்னும் ஓகே சொல்லவில்லை. அதுமட்டுமல்ல இரண்டு கட்சிகளுமே வட மாவட்டங்களிலுள்ள சில தொகுதிகளை கேட்டு ஆடம் பிடிக்கிறதாம். இதனால், கூட்டணி இழுபறி நிலையில் உள்ளது. இதற்கிடையே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ள விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக, கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க, அவர் முடிவெடுத்துள்ளார்.

இது குறித்து, தேமுதிக;  வழக்கமாக, தேர்தல் நேரங்களில், மாநாடு நடத்தப்படுவது வழக்கம். மாநாட்டில், கூட்டணி குறித்து, தொண்டர்களிடம், விஜயகாந்த் கருத்து கேட்பார். அதன் பின், கூட்டணி முடிவை அறிவிப்பார்.

இம்முறை, நேரம் இல்லாததால், மாநாட்டிற்கு பதிலாக, மாவட்ட செயலர்கள் கூட்டத்தை மட்டுமே கூட்டி கூட்டணியை முடிவு செய்ய, அவர் விரும்புகிறார். சென்னை, கோயம்பேடில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், இந்த வாரத்தில், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கவுள்ளது.