தேமுதிக. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் திடீரென  நேற்றிரவு மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள 'மியாட்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மகன் விஜய் பிரபாகரன் உருக்கமான வீடியோ  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விஜயகாந்த்தின்  உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. அவர் ராஜா மாதிரி இருக்கிறார். அவர் உண்மையாகவே கவலைக்கிடமாக இருந்தால் நான் அங்குதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வேலை விஷயமாக நெல்லூர் வந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பது உண்மைதான் ஆனால், படுத்தப் படுக்கையாக இருக்கிறார் என்று கூறுவது ஒரு மகனாக எனக்கு வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டார்.

விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வருவார். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல கேப்டன் மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வருவார். என் உயிரே போனாலும் அது நடக்கும். அவருக்கு ஒன்றும் ஆகாது தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.