Vijayakanth wheel chair in Singapore

வாழ்க்கையும் சில நேரங்களில் சினிமாத்தனமாகத்தான் இருக்கிறது. வெளித்தோற்றத்தை பார்த்து நாம் ஏதோ ஒன்று நினைக்க அதன் உள் அர்த்தமோ வேறொரு சஸ்பென்ஸை உடைக்கிறது. சாதாரண மனிதனுக்கு மட்டுமில்லை சினிமாவில் மாஸ் ஹீரோவாய் கம்பு சுற்றியவர்களை கூட காலம் ஒரு கட்டத்தில் தலைகீழாய் சுற்றிவிடுகிறது. இதற்கு விஜயகாந்த் மட்டும் விலக்கா என்ன? என்று கேட்கத் தோண்றுகிறது.

ஏன்?

சிங்கப்பூர் விமானத்தில் கலர்ஃபுல் சட்டையும், ஜீன்ஸுமாய் விஜயகாந்த் உட்கார்ந்திருந்ததை பார்த்து ‘வாவ்! கலக்கல் கேப்டன் இஸ் பேக்’ என்று நேற்றுதான் சிலிர்த்திருந்தோம். ஆனால் இன்று வந்திருக்கும் அவரது புகைப்படம் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. 

அதே டிரெஸ்ஸுடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் விஜயகாந்த் இருக்கும் படமொன்று அதிர்ச்சி பொங்க வைரலாகிறது. இதிலென்ன அதிர்ச்சி? அவர்தான் நல்லா இருக்கிறாரே! என்று வினவுபவர்கள்... அந்தப் படத்தை பார்த்தால் புரியும். 

சக்கர நாற்காலியில் வைத்து பணியாளர் ஒருவர் தள்ளிக் கொண்டு போக, அதே கலர்ஃபுல் காஸ்ட்யூமில் அமர்ந்திருக்கிறார் கேப்டன். அதுவும் தலை குனிந்தவராய். தலையில் தொப்பி வைத்து, சன் கிளாஸ் அணிந்து, இது போக பெரிய சைஸ் சால்வை ஒன்றையும் கழுத்தை சுற்றி போர்த்தியபடி குனிந்து அமர்ந்திருக்கிறார். தமிழர்கள் யாரும் அங்கே இருந்தால் தன்னை அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் இப்படி அமர்ந்திருந்தார் போலுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

சினிமாவில் கால்களை சுவற்றிலும், காற்றிலும் கூட ஊண்றி எதிரிகளை சுழற்றியடித்து பேர்த்தெடுத்த கேப்டனின் கால்கள் வீல் சேரில் அமர்ந்தபடி பேஷண்டாய் பயணிப்பதை பார்க்கையில் மனம் வருந்துகிறது. தமிழ்நாட்டில் கேப்டன் ஒரு இடத்திற்கு வருகிறாரென்றால், சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அங்கே கூட்டம் சேர்ந்து நிற்கும் அல்லது சேர்க்கப்படும். ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் கேப்டனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. தனி மனிதனாய் சக்கர நாற்காலியில் யாரோ ஒரு அறிமுகமே இல்லாத நபரின் உதவியுடன், நடக்க இயலாதவராய் நகர்கிறார். அந்த நபருக்கும், தான் தள்ளிக் கொண்டு போவது பல சினிமாக்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய ‘சிம்மாவை’ என்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 

சினிமா எனும் மாயையை உண்மை என்று நம்பி தங்களின் வாழ்க்கை முழுவதையும் ஏதோ ஒரு தனிநபருக்காக தொலைக்கும் ரசிகர்கள் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளவும் இந்த போட்டோ வழி செய்யும் என்கிறார்கள் அதே விமர்சகர்கள்.