என்றாவது ஒரு  நாள் இந்த விஜயகாந்துக்காகப் பொழுது விடியும். அப்போது தமிழக மக்களைத் தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நீண்ட நாள் கழித்து பொதுவெளியில் பேசியபோது தெரிவித்தார்.
தேமுதிக நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளார் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, அக்கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா ஆகியவற்றோடு சேர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா திருப்பூரில் நடைபெற்றது. உடல் நிலை பாதிப்புக்குப் பிறகு அவ்வப்போது கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் பங்கேற்றாலும், பொது வெளியில் நீண்ட நாளாக அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. தற்போதுதான் திருப்பூரில் முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பங்கேற்றார். இந்த விழாவில் பேசுவதற்காக அவர் பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
எதிர்பார்த்ததுபோலவே விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசினார். விஜயகாந்த் பேச எழுந்ததுமே தொண்டர்கள் ஆரவாரம் செய்தார்கள். நீண்ட ஆரவாரத்துக்கு இடையே விஜயகாந்த பேசும்போது” உங்கள் எல்லோருக்கும் வணக்கம். என்றாவது ஒரு  நாள் இந்த விஜயகாந்துக்காகப் பொழுது விடியும். அப்போது தமிழக மக்களைத் தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன். அடுத்த முறை நான் வரும்போது உங்களிடம் 1 மணி நேரம் பேசுவேன். இதேபோல தமிழகம் முழுவதும் வருவேன். இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள்.” என்று உருக்கமாகப் பேசினார்.
விஜயகாந்த் சற்று சிரமப்பட்டுதான் பேசினார். அவருடைய பேச்சை மேடையில் இருந்தவர்கள் மட்டுமல்ல, தொண்டர்கள் கரவோஷத்துக்கு இடையே கேட்டு மகிழ்ந்தனர். கடைசியாக ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வட சென்னை தொகுதியில் விஜயகாந்த சற்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.