அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் 3, சீட், 4 சீட் ஒதுக்க நீங்கள் யார் என விஜகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இழுபறியாக தொடர்ந்து வருகிறது. பாமகவுக்கு ஒதுக்கிய எண்ணிக்கையில் ஒரு சீட் கூட குறையாமல் தரவேண்டும் என தேமுதிக கேட்டு வரும் நிலையில் அதிமுக 3 தொகுதிகளை ஒதுக்க முன் வந்துள்ளது. இதனை ஏற்க தேமுதிக மறுத்து வருகிறது. இந்நிலையில் விஜயகாந்தை சந்திக்க பல்வேறு தலைவர்கள் அவரது இல்லத்திற்கு வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் கும்பகோணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய விஜயபிரபாகரன், ‘’தேமுதிகவினர் யாருக்கும் பயப்படாதவர்கள் தினமும் காலையில் எனது தந்தை முகத்தில் தான் முழிப்பேன். ஆனால் தற்பொழுது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முகத்திலும் முழிக்க வேண்டியது உள்ளது. விஜயகாந்த் ஒளிந்துவிட்டார். அவருக்கு மூன்று சதவீதம் ஓட்டு கூட கிடையாது. பெண்கள் ஓட்டு கிடையாது, என்று சொன்னவர் எல்லாம் தற்போது எனது தந்தையிடம் கூட்டணிக்கு எனது வீட்டில் வந்து நிற்கிறார்கள். வருங்காலத்தில் பிரதமர் யார் என்றும் முதல்வர் யார் என்றும் தீர்மானிப்பது தேமுதிகதான். விஜயகாந்தின் ஆட்சி இல்லை என்றால் எதுவும் இல்லை. அவர்களிடம் ஏண்டா வந்து நிற்கீறீர்கள் என்று கேட்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். 

விஜயகாந்த் எப்போது சிங்கம் போல் தான் வருவார். ஆனால் பன்றிகள் கூட்டமாக வரும். விஜயகாந்திற்கு உடல் நலக்குறை என்று கூறுபவர்கள், ஏண்டா என் வீட்டு வாசலில் வந்து நிற்கீறீர்கள். அவர் கண் இமைத்தால் போதும். சிங்கம் குகைக்குல் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். எங்ககிட்ட வைத்து கொள்ளாதீர்கள், நாங்கள் ஓங்கி கொடுக்கின்ற கட்சி. வரும் எம்பி தேர்தல் முடிந்த பிறகு, விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி இல்லை. தற்போது தமிழகத்திற்காக டெல்லியில் குரல் கொடுக்க சரியான தலைவர் இல்லை. தமிழ்நாட்டிற்கு திட்டங்களை செய் என்று சொல்லும் தலைவரை கொண்டு வரவேண்டும்.

இப்போது உள்ளவர்கள் போல் வாயை மூடிக்கொண்டு சுற்றுகிற ஆள் விஜயகாந்த் இல்லை. பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளை முதலில் வந்து பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த். குழந்தைகளின் பெற்றோருக்கு நான் எப்பொழுதும் மகனாக இருப்பேன். கும்பகோணம் மேல் எனக்கு பாசம் உண்டு. என்னை மகனாகவும், நண்பர்களாகவும் பாருங்கள். என்னிடம் செல்பி எடுத்துக் கொள்ளுங்கள்.முத்தம் கொடுங்கள். தோளில் கையைபோட்டு கொள்ளுங்கள். நான் உங்க வீட்டு பிள்ளை, உங்க குரலுக்கு உடனடியாக வந்து நிற்பேன். தப்பு, ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில் தப்பு பண்ணாத தலைவராக கேப்டன் விஜயகாந்த் உள்ளார். அவர் மீது குற்றம் சொல்ல முடியாது.

 

வரும் எம்பி தேர்தலில் எதிரிகளுக்கு சவுக்கடி கொடுத்து, அவர்களின் முகத்திரையை கிழிக்கனும். எனக்கும், விஜயகாந்திற்கும் கும்பகோணம், தஞ்சை தொகுதி மேல் தனி பாசம் உண்டு’’ என அவர் கூறினார்.