உடல்நலம் குன்றியதால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் விஜயகாந்த். அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். விஜயகாந்தை வரவேற்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிகாலையில் குவிந்தனர்.

பன்னாட்டு முனையத்தில் பிரேமலதா, மகன் பிரபாகரன் உடன் தங்கி இருந்த விஜயகாந்த் காலை சிற்றூண்டியை அங்கேயே முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். விஜயகாந்த் 7 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியதால் நல்ல நேரம் பார்த்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது குடும்பத்தினர் விமான நிலையத்தில் தங்கும்படி கூறியதால் அவர் விமான நிலையத்தில் நீண்ட நேரம் ஓய்வு எடுத்தார். அவரது வீட்டில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் வருகை தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.