’கேப்டன் பூரண குணமடைந்து தாயகம் திரும்புகிறார்’ பிரேமலதா டிக்டேட் செய்ய, சுதீஷ் ப்ரூஃப் பார்த்து வெளியிடப்பட்ட தே.மு.தி.க.வின் அந்த அறிக்கை அக்கட்சி தொண்டர்களை துள்ளி எழ வைத்தது. ‘சிங்கம் மீண்டும் களமிறங்குதுடோய்!’ என்று குதித்துக் கிளம்பியவர்களின் நம்பிக்கையை கிட்டத்தட்ட அசிங்கப்படுத்தி உட்கார வைத்துவிட்டதாக பிரேமலதா மீது கடுப்பாகின்றனர் அக்கட்சியினர். 

என்ன பிரச்னை?....

பேச்சு திறன் மேம்பாடுக்கு சிகிச்சை எடுப்பதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி அமெரிக்கா சென்றார் விஜயகாந்த். இரண்டு மாத காலம் கழித்து நேற்று காலை சென்னை திரும்பினார். இந்நிலையில் இதற்கு சில மாதங்கள் முன்பாக இதேபோல் அமெரிக்கா செல்லும் முன் ‘சிகிச்சை முடிந்து பழைய கேப்டனா உங்க முன்னாடி வந்து நின்னு பேசுவேன்.’ என்று தானே சொல்லிச் சென்றார் விஜயகாந்த், கூடவே திரும்பியதும் தன்னுடைய தோரணையை காட்டுவதற்காக திருப்பூரில் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவும் சொல்லியிருந்தார். ஆனால் அவர் திரும்பி வரும்போது, சென்றதை விட மிக மோசமான உடல் நிலையுடனே வந்தார். பேச்சும் மிக கவலையளிக்குமளவே இருந்தது. 

இந்நிலையில்தான் மீண்டும் டிசம்பரில் அமெரிக்காவுக்கு போய் சிகிச்சையில் மீண்டும் அமர்ந்தார் விஜயகாந்த். இந்த முறையாவது பெரியளவில் உடல் நலன் தேறி வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த ஜனவரி 26-ம் தேதியன்று குடியரசு தின வாழ்த்து சொல்லி வீடியோ மெசேஜ் ஒன்றை அமெரிக்காவில் இருந்து வெளியிட்டிருந்தனர். அதில் பேசியிருந்த விஜயகாதின் குரல் வளம் அப்படியொன்றும் பெரிதாய் முன்னேறி இருக்கவில்லை. கூடவே பல முறை கட் செய்து ரீடேக் எடுத்து உருவாக்கப்பட்டு இருந்தது அந்த வீடியோ. இதையெல்லாம் பார்த்துவிட்டு தொண்டர்கள் ரொம்பவே சோர்ந்தனர். 

ஜனவரி 26-க்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பரபரப்புகள் சூடு பிடித்தன. தே.மு.தி.க.வும்  கூட்டணிக்கு தயாரானது. தி.மு.க.வா அல்லது அ.தி.மு.க.வா? என்று அலைபாய்ந்து கடைசியில் அ.தி.மு.க.வின் கூட்டணிக்குள் பி.ஜே.பி.யின் சிபாரிசு வழியாக கேப்டன் கட்சி செட்டிலாவதாக அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள். 

கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வின் முக்கியஸ்தர்கள் இடையில் கூட்டணி பற்றி ஆலோசனைன் ரகசியமாக போய்க் கொண்டிருந்தது. இப்படியிருக்கையில்தான் விஜயகாந்த் தமிழகம் திரும்பும் தகவலை வெளியிட்டது அக்கட்சி தலைமை. அதிலும் ‘பூரண குணமடைந்து’ என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை நிர்வாகிகள் சந்தேகத்துடன் பார்த்தனர். காரணம் ஜனவரி 26 வெளியான வீடியோவே அவரது லேட்டஸ்ட் நிலையை படம் பிடித்துக் காட்டிய நிலையில், பூரண குணம்! பழைய கம்பீர கேப்டன்! என்பதெல்லாம் எப்படி சாத்தியமாகும்? என்பதே அவர்களின் கேள்வி. இருந்தாலும் கூட விஜயகாந்தை வரவேற்க பிரம்மாண்ட கூட்டம் ஏர்போர்ட்டில் குவிய வேண்டும் என தலைமை விரும்புவதை அறிந்து கிளம்பினர்.


பிப்ரவரி 16-ம் தேதியன்று காலை ஐந்தரை மணியில் இருந்தே கட்சி நிர்வாகிகள் தலைமையில் தொண்டர்கள் ஏர்போர்ட்டில் குவிய துவங்கினர். மணிக்கணக்காக காத்திருந்தும் அவர் வரவில்லை. அதிகாலை 2 மணிக்கெல்லாம் தரையிறங்கிவிட்ட விஜயகாந்த் களைப்பினால் தூங்கிவிட்டதாக கூறப்பட்டது. ஒருவழியாக பனிரெண்டரை மணிக்கே அவரை வெளியே அழைத்து வந்து, திறந்த ஜீப்பில் அமர வைத்து  அழைத்து சென்றுவிட்டனர். விஜயகாந்த் ஏர்போர்ட்டில் எழுச்சி உரை ஆற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் பேசவேயில்லை. 

நேற்று சென்னை ஏர்போர்ட்டில் நடந்த சம்பவங்கள் தே.மு.தி.க.வின்  நிர்வாகிகளையும், தொண்டர்களையும் செம்ம கடுப்பாக்கிவிட்டது. ” எங்களுக்கு வந்த சந்தேகம் சரியாதான் இருக்குது. ‘விஜயகாந்த் வந்து நின்றால்தான், பேசினால்தான் அதிக இடங்களை தருவோம், நீங்கள் விரும்பும் இடங்கள் சிலவற்றையும் தருவோம்! அப்படின்னு அ.தி.மு.க. கண்டிஷன் போடுறதோ கட்சிக்குள்ளே ஒரு தகவல் ஓடிட்டே இருந்துச்சு. 

இப்போ பொருளாளர் பிரேமலதா இப்படி தலைவரை தாங்கி தடுக்கியே கூட்டிட்டு போறத நினைச்சால், அ.தி.மு.க.வின் கண்டிஷனுக்கு மடங்கி,  முழுதாய் தேறாத கேப்டனை தேர்தலுக்காக கூட்டிட்டு வந்துட்டாங்கன்னு நல்லாவே புரியுது. இதுக்காக நம்மளையும் ஏமாத்தியிருக்கணுமா?” என்று பொரிந்துவிட்டனர். 

தே.மு.தி.க.வின் தொண்டர்கள் பிரேமலதா மீது இப்படி பாய்வது ஒருபுறமிருக்க, ‘தே.மு.தி.க. தாமாகப் போயி யாரிடமும் கூட்டணி பற்றி பேசவில்லை. தமிழகத்தில் உள்ள முக்கிய பெரிய கட்சிகள்தான் எங்களுடன் கூட்டணி பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் பெரிய கட்சின்னா யாரு?ன்னு உங்களுக்கே தெரியும்.’ என்று பிரேமலதா கொடுத்த பேட்டி, அ.தி.மு.க.வை பெரும் எரிச்சலடைய வைத்துள்ளது. ‘விஜயகாந்துக்கு மட்டும்தான் மவுசு இருக்குது. அதற்காக மட்டும்தான் கூட்டணி வைக்கிறோம். என்னமோ இந்தம்மா தன்னை லேடி கேப்டன்னு நினைச்சுட்டு பேசுறதெல்லாம் சரிப்பட்டு வரவே வராது.தேவையா தே.மு.தி.க.?’ என்று ஆளுங்கட்சியின் பெருந்தலைகள் உருட்ட துவங்கிவிட்டார்களாம்.