Vijayakanth release a statement on the issue of Nirmala Devi
நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தால்தான், பெற்றோர்கள் அச்சமின்றி பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்கு அனுப்பக்கூடிய நிலை ஏற்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்க கல்லூரியின் துணை பேராசிரியை நிர்மலா தேவி, 4 மாணவியரிடம், பாலியல் தொடர்பாக நிர்பந்தப்படுத்திய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, பல்கலைக்கழக வேந்தர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, ஆளுநர் பன்வாரிலாலும் செய்தியாளர்களிடம்
விளக்கமளித்தார். குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

இந்த நிலையில், தேதிமுக தலைவர் விஜயகாந்த் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேவாங்கர் கலைக் கல்லூரியின் துணை பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படிக்கும் மாணவிகளைத் தவறான வழிக்கு
செல்பேசி மூலம் அழைத்து இருப்பதைக் கடுமையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழர்களின் தன்மானத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

நிர்மலா தேவி எந்த தைரியத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார் என்பதை சமூக வலைத்தளங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மாணவிகளை சரியாக வழிநடத்த வேண்டிய ஆசிரியையே இதுபோன்ற செயல்களைச் செய்வது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. நிர்மலாதேவியின் பின்னணியில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த விவகாரத்தில், தமிழக ஆளுநர் தாமாக முன்வந்து செய்தியாளர்களைச் சந்தித்திருப்பது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியையே நினைவுப்படுத்துகிறது என்றார். எனக்கு 78 வயதாகிறது; எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர் என தானாக ஆளுநர் கூறுவது சந்தேகத்தையும் எண்ணற்ற கேள்விகளையும் எழுப்புகிறது.

தமிழகத்தின் மூத்த குடிமகனாக இருக்கும் ஆளுநர், பத்திரிகையாளரின் கன்னத்தைத் தொட்டது அநாகரிகத்தின் உச்சம். எந்தப் பயமும் இன்றி நள்ளிரவில்கூட ஒரு பெண் தனியாக வெளியில் செல்லும் நிலை வரும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.

ஆனால் இங்கு சிறுமிகள், மாணவிகள், பெண்கள் என எந்த வித்தியாசமும இல்லாமல் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த, கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். நிர்மலா தேவிக்கு கிடைக்கக்கூடிய தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது
என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
தமிழக ஆளுநரே சந்தேக வளையத்துக்குள் இருப்பதால், சிபிஐ கூட நேர்மையாக விசாரிக்குமா? என்பது சந்தேகம்தான். நிர்மலா தேவியின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் போன்ற சக்திவாய்ந்த அதிகாரமிக்க நபர்கள் எல்லோரையும் கண்டறிய, நீதிமன்றமே தாமாக முன்வந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.
உண்மைகளைக் கண்டறிந்து இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தால்தான், பெற்றோர்கள் அச்சமின்றி தனது பெண் பிள்ளைகளை பள்ளி - கல்லூரி மற்றும் பணிகளுக்கு தைரியமாக அனுப்பக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
