காங்கிரஸ் கட்சியிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு போன்ற அதிகாரப் பரவலாக்கல் மற்றும் அடிமட்டக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி பேசியுள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த திக்விஜய் சிங், ''நான் இதை ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். நான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்க்கிறேன். அவர்கள் அரசியலமைப்பையோ அல்லது நாட்டின் சட்டங்களையோ மதிப்பதில்லை.

ஆர்எஸ்எஸ் சக்திவாய்ந்த அமைப்பு

மேலும் இது ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு. ஆனால், பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பு, மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனம் என்று சொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக மாறியிருப்பதால், அவர்களின் அமைப்புத் திறனை நான் பாராட்டுகிறேன்'' என்றார். மேலும் எக்ஸ் தளத்தில் '1990-களில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் காலடியில் பிரதமர் நரேந்திர மோடி' அமர்ந்திருப்பது போன்ற ஒரு கருப்பு வெள்ளை படத்தை திக்விஜய் சிங் பகிர்ந்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அடிமட்ட தொண்டர் டூ பிரதமர்

தொடர்ந்து அந்த படத்துக்கு கீழே பதிவிட்ட திக்விஜய் சிங், 'ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிமட்டத் தொண்டராக இருந்த ஒருவர், தலைவர்களின் காலடியில் அமர்ந்து பணியாற்றி, பின்னர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தது வியப்பிற்குரியது. இதுதான் ஒரு அமைப்பின் வலிமை' என்று பாராட்டியுள்ளார்.

ராகுல் காந்திக்கு மறைமுக வலியுறுத்தல்

தனது பதிவை ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை டேக் செய்த திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியிலும் இது போன்ற அதிகாரப் பரவலாக்கல் மற்றும் அடிமட்டக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்தினார். ஆர்எஸ்எஸ் அமைப்பை திக்விஜய் சிங் பாராட்டியதற்கு அவரது காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் அவர் சரியாகத்தானே சொல்லி இருக்கிறார் என்று காங்கிரஸில் இருந்து அவருக்கு ஆதரவுக்குரலும் எழுந்துள்ளது.

காங்கிரஸ் ஒரே குடும்பத்திற்குள் சுருங்கிவிட்டது

திக்விஜய் சிங் கருத்தை பாரட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்திற்குள் சுருங்கிவிட்டது என்று விமர்சனம் செய்துள்ளார். "ஒரு அமைப்பின் பலத்தை திக்விஜய் சிங் இப்போது புரிந்து கொண்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் இன்னும் அதை உணரவில்லை. காங்கிரஸ் தலித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தினமும் அவமதிக்கிறது.

காங்கிரஸ் ஒரே குடும்பத்திற்குள் சுருங்கிவிட்டது. காங்கிரஸில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கட்சிக்குள் முடிவெடுக்கும் உரிமை உள்ளது. ஒரு அமைப்பின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஒருவரை அங்கீகரித்து, வளர வாய்ப்பளிக்க வேண்டும். இந்த குணம் காங்கிரஸில் இல்லை'' என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.