மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 7 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதி, பாஜவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டன. அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்ததும், தேமுதிகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தேமுதிகவை எப்படியேனும் சேர்த்து தேர்தலில் நிற்க வேண்டும். அப்போதுதான் கணிசமான தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் செயல்பட முடியும் என்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கருதுகின்றனர். 

இதனால் அதிமுக தலைவர்களிடம் எப்படியாவது விஜயகாந்தை சமாதானம் செய்யும்படி வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தினார். 6வது முறையாக ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விஜயகாந்த்தை நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசினர். 

நீண்ட இழுபறிக்கு பிறகு மக்களவை தேர்தலில் 5 சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்கிறார். பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ”நமது அம்மா” நாளிதழில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் கூட்டணி தலைவர்கள் புகைப்படங்கள் அடங்கிய விளம்பரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகைப்படம் இடம்பெறவில்லை. அந்த விளம்பரத்தில் சீட் ஒதுக்கப்படாத மூவேந்தர் முன்னணி கழக தலைவர் என்.சேதுராமன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், கொங்கு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தியார் ஆகியோர் படங்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

 

இது மக்களவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற சந்தேகத்தை வலுக்க வைத்துள்ளது. ஆனால், அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வரவேண்டும் என அதிமுகவுக்கு டெல்லி அசைன்மெண்ட் கொடுத்து இருப்பதாகவும் அதனால் இன்றைய மோடி மேடையில் விஜயகாந்த்  நிச்சயம் இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. விளம்பரத்தில் விஜயகாந்த் படத்தை போட்டுவிட்டு அவர், வராவிட்டால் அவமானமாகி விடும் என்பதால் அதிமுக தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது.