கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

அதிமுகவுடன் கூட்டணியை இன்று விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார். அவர் முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டார்.

 

பின்னர், தேமுதிகவுடனான இழுபறி குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  இதனிடையே விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து கேட்டபோது ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று பியூஷ் கோயல் கூறினார். 

தேமுதிக தலைவர்கள் தன்னை சந்திக்கவிருக்கிறார்கள். தேமுதிகவுடன் கூட்டணி உறுதி என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால், தேமுதிக தரப்பில் கூட்டணி குறித்து இதுவரை பதிலளிக்கவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த், வாசன் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் சென்னை விமான நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறனர். அங்கு தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் வந்துள்ளார்.