சென்னையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு மீடியா நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

உடல் நலம் பாதிப்பு, தேர்தல் தோல்வி என துவண்டு இருந்த கேப்டன் மறுபடியும் அரசியல் களத்தில் ஆழமாக கால் பதிக்க ஆயத்தமாகி வருகிறார். தினமும் தற்போது தவறாமல் ஒரு அறிக்கை கேப்டன் தரப்பிடம் இருந்து வந்துவிடுகிறது. இதேபோல் நிர்வாகிகள் சிலரையும் கேப்டன் அவ்வப்போது சந்திக்க ஆரம்பித்துள்ளார். 

இந்த நிலையில் கேப்டன் தனது பிறந்த நாளை கடந்த வாரம் உற்சாகமாக கொண்டாடினார். பிறந்த நாளுக்கு முதல் நாள் பிரபல ஊடகங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை தனித்தனியாக அழைத்து சந்தித்துள்ளார் கேப்டன். சென்னையில் சுதீஷ் குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் ஓட்டலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சிலரை கேப்டன் தனது வீட்டுக்கே அழைத்து சந்தித்துள்ளார். 

அப்போது உடல் தற்போது பரவாயில்லை என்று கூறியுள்ளார் கேப்டன். மேலும் வந்தவர்கள் பெரும்பாலானவர்களை சரியாக அடையாளம் கண்டிருக்கிறார் கேப்டன். மேலும் அவர்களுடனான தனது பழைய அனுபவங்களையும் அப்படியே எடுத்துக் கூறி அவர்களை அசர வைத்துள்ளார். கேப்டனுக்கு நினைவு தப்பிவிட்டது என்று வெளியான தகவல் பொய் என்பதை இதன் மூலம் ஊடகவியலாளர்கள் நேரடியாக தெரிந்து கொண்டனர். 

மேலும் நடப்பு அரசியல் விவகாரங்களையும் தட்டுத் தடுமாறி கேப்டன் பேசியுள்ளார். அப்போது உடல் சரியாகவிட்டது ஆனால் பேச்சு தான் வரமாட்டேங்குது என்று உருகியுள்ளார் கேப்டன். இதனை கேட்டு கண் கலங்கிய சிலர் நிச்சயமாக உங்களுக்கு சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் பேச்சு வரவில்லை என்பதை ஒரு குறையாக கருதாமல் எப்படியும் தன்னால் மீண்டும் பழைய போல் பேச முடியும் என்று நம்பிக்கையும் கூறியுள்ளார் கேப்டன்.