போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சீக்கிரமாக வந்து திமுக இளைஞரணியில் இணைந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளார் அந்த அணியின் மாநில துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி . 

உதயநிதி இளைஞரணி செயலாளரானதிலிருந்து, அடுத்தடுத்த அதிரடிகளால் ஆடிக்கிடக்கிறது திமுகவிலுள்ள மற்ற அணிகள், திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, தமிழகம் முழுவதும் குளம், ஏரிகளை தூர்வாரும் பணிகளை அந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டிக்கொண்டு அதகளப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் ஈசநத்தம், நெடுங்கூர், உப்பிடமங்கலம் உள்ளிட்ட இடங்களில் குளம் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்றிருந்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தின் நலனுக்காக எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது திமுக தான்,  இளைஞர்களை போராட்டத்துக்கு மட்டும் பயன்படுத்தாமல் சமூக சேவைக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இப்படி குளம், குட்டைகளை தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மூன்று குளங்களில் திமுக இளைஞரணியினர் இன்று தூர் வாரும் பணிகளை தொடங்க இருந்த நிலையில், திடீரென இரவோடு இரவாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தூர்வாரும் பணிகளை ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. நாங்க செய்ய இருந்த வேலைகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், 14-ம் தேதி முதல் திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சீக்கிரமாக வந்து திமுக இளைஞரணியில்   இணைந்துகொள்ளலாம் எனவும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சொன்னது அந்த இடமே  கலகலப்பானது.