தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

இதையொட்டி, நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் நேற்று முன்தினம் மனித சங்கலி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதில்,கலந்து கொள்வதற்காக சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணி மண்டபம் திறப்பு விழா நடந்தது. மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நெட்டாவை சந்தித்து, நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை சந்தித்து, தமிழக அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவது எப்படி என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக நீட் தேர்வில் நிரந்தர விலக்கு பெற முடியாவிட்டாலும், தற்காலிக விலக்கு பெறுவதற்கு சாத்தியம் உள்ளதா, இதற்காக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை நடத்த உள்ளதாக தெரிகிறது.