தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். அவர் முன்பு போல பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வி%யகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுக் கூட்டத்தில் பேசி வருகிறார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விஜயபிரபாகரன் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காலைல எழுந்து நான் எங்கப்பா முகத்தில முழிக்கிறனோ இல்லையோ, எல்லாக் கட்சிக்காரங்களும் வரிசை கட்டி அவர் முன்னாடி வந்து நிக்கிறாங்க என தெரிவித்தார்.

தேமுதிக., ஓஞ்சி போச்சு அப்டின்றாங்க.. ரெண்டு பெர்சண்டு மூனு பெர்சண்டு அப்டின்றாங்க.. இங்க இருக்கற கூட்டத்த பாருங்க அப்படியா தெரியுது என கோபத்துடன் கூறினார்.

தொலைக்காட்சிகளில் ஏதோ விவாத மேடையின்னு உட்கார்ந்து யாரோ நாலு பேரு பேசறாங்க…தேமுதிக.,வுக்கு 3 சீட் , 4 சீட் போதும்னு பேசிக்கிறாங்க…! நீங்க யாருங்க அதை சொல்லுறதுக்கு! எங்களுக்கு 4 சீட்டு கொடுக்கணும்னு நீங்க யாரு பிக்ஸ் பண்றது! என கொந்தளித்தார்.

எங்க வலிமை என்னான்னு எங்களுக்கு தெரியும். அதவிட மத்த கட்சிக்காரங்களுக்கு தெரியுது. அதனால்தான் வந்து நிக்கிறாங்க! தேமுதிக.,வுக்கு இன்னும் உயிர் இருக்கு. அது எங்க இருக்குன்னா.. தொண்டர்களாகிய உங்ககிட்டதான்.. ! என தொண்டர்களை உசுப்பேற்றினார்.

அப்பா கண் இமைச்சாலே போதும்.. சிங்கம் குகைக்குள்ள இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்… கூட்டமா பன்னிங்க சுத்தினாலும் பன்னி பன்னிதான். எங்களை லேசில எடை போடாதீங்க.. இங்கே எத்தனை இளைஞர்கள் பாருங்க! இது இளைஞர்கள் நிறைந்த கட்சி! என பேசினார்.

தேமுதிக., ஓஞ்சி போச்சுன்னு சொல்றவங்க மூஞ்சியெல்லாம் கிழிஞ்சி தொங்கணும்… செய்வீங்களா? செய்வீங்களா? என ஜெயலலிதா பாணியில் தொண்டர்களிடமே கேள்வி கேட்டு கலக்கி எடுத்தார்.

தேமுதிக ஓங்கி கொடுக்கற கட்சி.. ஓஞ்சி போற கட்சி இல்ல.. வரும் தேர்தல்ல கேப்டன் ஆதரவில்தான் ஆட்சி அமையும்! என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.