அதிமுக கரை வேஷ்டி கட்டியதை மாற்றியதற்கு காரணம் இருக்கிறது. அதிமுக கரை வேஷ்டி கட்டக் கூடாது என்று என் பெயரில் வழக்கு போட்டார்கள். ஆனால் படத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர்கள் சொல்லவே இல்லை. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று இணைந்தார். பனையூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “எம்.ஜி.ஆர் பின்னால் அணிவகுத்தவர்களில் நானும் ஒருவன். ஒரு தூய்மையான ஆட்சியைத் தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த புதிய மாற்றத்தைக் கொண்டு வர விஜய் முயற்சிக்கிறார். அதனால், அவருடன் கைகோர்த்துப் பயணிக்க உள்ளேன். தமிழ்நாட்டில் மாற்றங்கள் வரவேண்டும்.

இன்றைக்கு ஜெயலலிதாவின் படத்தை மாற்றி இருந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? இவனெல்லாம் என்ன பெரிய தியாகி, இவர் என்ன கொள்கை பிடிப்புள்ளவர்? கட்சி மாறிவிட்டு ஒரு நிமிடத்தில் படத்தை மாற்றி போய்விட்டார் என்பீர்கள். அதிமுக கரை வேஷ்டி கட்டியதை மாற்றியதற்கு காரணம் இருக்கிறது. அதிமுக கரை வேஷ்டி கட்டக் கூடாது என்று என் பெயரில் வழக்கு போட்டார்கள். ஆனால் படத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர்கள் சொல்லவே இல்லை. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இன்றைக்கு புரட்சித்தலைவர் படமும், அண்ணா படமும் விஜயின் வண்டியிலே எப்படி அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதிமுக வண்டியில் எப்படி வருகிறது என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு இயக்கத்திலேயே நான் பணியாற்றினேன். முழுமையாக அந்த இயக்கத்தில் மட்டும்தான் இருந்தேன். நான் அந்த கட்சியில் இருந்து அடிக்கடி ஜம்ப் செய்ததில்லை. ஏதாவது ஒரு கட்சிக்கு சென்று இருக்கிறேனா? இன்றைக்கு தவெகவிற்கு வந்ததற்கு காரணமே புதிதாக ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கு. அதற்கு ஒருவர் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். மக்கள் வரவேற்பு அமோகமாக உள்ளது. தொலைக்காட்சி உரிமையாளர்கள் எங்களுக்கு சேனலை ஒரு கோடி பேர் பார்க்கிறார்கள் என்கிறார்கள். ஆகையால் தான் பத்து சேனல் போட்டு இறங்குற இடத்தில் கூட கவர் செய்து வருகிறார்கள்.

நீங்கள் தானே சொல்கிறீர்கள். உங்கள் ஓனர் சொன்னதால்தான் தவெக நிகழ்ச்சிகளை நிமிடத்திற்கு நிமிடம் எடுக்கிறீர்கள். வேறு எந்த கட்சிக்காவது எடுக்கிறீர்களா? ஹெலிகாப்டரில் எடுக்கிறீர்கள், அங்கே நிற்கிறபோதும் எடுக்கிறீர்கள். சுத்தி சுத்தி எதற்காக எடுக்கிறீர்கள். அதற்கு மக்கள் விஜய் வரவேற்கிறார்கள் என்ற நோக்கம் தானே’’ எனக்கூறினார். அப்போது குறிப்பிட்ட நிருபர்கள், ‘‘ விஜய் வெளியில் வருவதில்லை. அவரிடம் வெளிப்படைத் தன்மை இல்லை. அதனால் தான் எடுக்கிறோம்’’ என்று கூறினார்கள். அதற்கு கவுண்டர் செய்த செங்கோட்டையன், ‘‘வெளிப்படை தன்மை இல்லை என்றால் டெல்லியில் எடுத்திருக்க வேண்டியதுதானே. டெல்லியில் வெளிப்படை தன்மை இல்லாமல்தானே காருக்குள் மாஸ்க் போட்டு சென்றார். அதை எல்லாம் எடுத்துக்காட்ட வேண்டியது தானே’’ எனக்கு கூறினார்.

டெல்லியில் அமித் ஷாவை சந்திக்கப் போன எடப்பாடி பழனிச்சாமி, கார் மாறி கார் ஏறி, முகத்தில் மாஸ்க் போட்டு தன்னை மறைத்துக் கொண்டு சென்றதாக கூறப்பட்ட சம்பவத்தை செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்.