கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாகி உள்ள நிலையில் அங்கு போட்டியிடுவது என்று மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முடிவெடுத்துள்ள நிலையில் பாஜக சார்பில் அங்கு களம் இறங்க நயினார் நாகேந்திரன் தற்போதே காய் நகர்த்த தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத ஒரு மாவட்டம் என்றால் அது கன்னியாகுமரி மாவட்டம் தான். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பலம் இல்லாமல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் அங்கு தனித்தனியாக களம் இறங்கின. இந்த தேர்தலில் அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்பி ஆகி மத்திய அமைச்சரும் ஆனார்.

அதே சமயம் கன்னியாகுமரியில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடம் கிடைத்தது. அதிமுகவின் ஜான் தங்கம் 3வது இடத்தை பிடித்தார். 2009 தேர்தலில் வென்று எம்பியாக இருந்த திமுக சார்பில் போட்டியிட்ட ராஜரத்தினத்தால் 4வது இடத்தையே பிடிக்க முடிந்தது- எனவே கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரசுக்கும், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கும் ஒதுக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடப்போவது யார், பாஜக சார்பில் களம் இறங்கப்போவது யார் என்பது தொடர்பாக தற்போதே கேள்விகள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தான் அங்கு போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே
தெரிவித்துவிட்டார். தனது தந்தையின் நண்பர்கள் தன்னை கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த முடிவெடுத்துள்ளதாக விஜய் வசந்த் கூறியுள்ளார். அதே சமயம் கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதே விஜய் வசந்திற்காக டெல்லியில் லாபி தொடங்கிவிட்டதாகவும் கன்னியாகுமரியில் விஜய் வசந்தை தவிர வேறு யார் களம் இறங்கினாலும் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்று பேச்சுகள் அடிபட ஆரம்பித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

வசந்தகுமார் இருந்த வரை கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவரை தவிர வேறு தகுதியான
வேட்பாளர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் கூட 2019 தேர்தலில் கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட வசந்தகுமாருக்கு எதிராக களம் இறங்கியவர் ரூபி மனோகரன். சென்னையில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யம் நடத்தி வரும் ரூபி மனோகரன் எப்படியேனும் கன்னியாகுமரியில் போட்டியிடும் முடிவுடன் காய் நகர்த்தினார். இதற்கு கை மேல் பலனாக அவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துவிட்டதாகவே தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் வசந்தகுமாருக்கு அங்கு போட்டியிட சீட் கிடைத்தது.

எனவே இந்த முறையும் வசந்தகுமாரின் மகனுக்கு எதிராக ரூபி மனோகரன் சீட் கேட்பாரா? அல்லது விட்டுக் கொடுப்பாரா?
என்பது போகப்போகத்தான் தெரியும். அதே சமயம் ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஆனால் அதனை விளம்பரப்படுத்தாத காரணத்தினால் கடந்த தேர்தலில் படு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி மீண்டும் காலியாகியுள்ளதால் அங்கு களம் இறங்க பொன்.ராதாகிருஷ்ணன் ஆயத்தமாகி வருவதாக சொல்கிறார்கள்.

கன்னியாகுமரி தொகுதியில் 2014 தேர்தலில் திமுக, அதிமுக  ஆகிய இரண்டு பெரும் கட்சிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஒரே பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தான். எனவே தனிப்பட்ட தனது செல்வாக்கின் மூலம் இடைத்தேர்தலில் வெல்ல முடியும் என்று கன்னியாகுமரி
தொகுதியை பொன்.ராதாகிருஷ்ணன் நிச்சயம் கேட்பார் என்கிறார்கள். அதே சமயம் அதிமுகவில்  இருந்து பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரனுக்கும் கன்னியாகுமரி தொகுதி மீது ஒரு கண் உண்டு. கடந்த முறை கன்னியாகுமரியில் போட்டியிட விரும்பியே அவர் காய் நகர்த்தினார்.

ஆனால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அங்கு வாய்ப்பு கிடைத்தது. ராமநாதபுரத்தில் போட்டியிட்டு நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் மீண்டும்

கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டியிடத் தயார்  என்று அறிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன். கடந்த தேர்தலில் பொன்.ராதா, நயினார் என இருவருமே தோல்வியை தழுவியுள்ளனர். எனவே இருவரையுமே பாஜக மேலிடம் சம தூரத்தில் வைத்தே பார்க்கும் என்கிறார்கள். அதே சமயம் கன்னியாகுமரி தொகுதியில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே வெற்றி வாய்ப்பு உண்டு. எனவே இயல்பாகவே அங்கு பொன்.ராதா எளிதாக வேட்பாளர் ஆகிவிடுவார் என்கிறார்கள். ஆனால் நயினாரும் விடாமல் மல்லுக்கட்டி பார்ப்பார் என்பது அவரது பேட்டியின் மூலமே தெரிகிறது.