ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க.விற்கு எதிராக விஜய் ரசிகர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தால் சர்கார் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சரண்டராகியுள்ளார். சர்கார் படத்தில் விஜய் புகைபிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான அன்றே தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ். அன்புமணியின் தந்தையான ராமதாசோ ஒரு படி மேலே சென்று சிகரெட் நிறுவனங்களிடம் விஜய் லஞ்சம் வாங்குவதாக அதிரடியாக குற்றஞ்சாட்டினார். மேலும் சர்கார் படத்தில் விஜய் புகை பிடிக்கும் போஸ்டருக்கு எதிராக தமிழக சுகாதாரத்துறையிலும் பா.ம.க. புகார் அளித்தது. 

பா.ம.க. புகாரை தொடர்ந்தே விஜய், தயாரிப்பாளர் சன்பிக்சர்ஸ், இயக்குனர் முருகதாசுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. வேறு வழியின்றி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து விஜய் புகைப்பது போன்ற பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை சன்பிக்சர்ஸ் அகற்றியது. இதனால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் பா.ம.க.விற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். குச்சிகொளுத்தி பா.ம.க. எனும் ஹேஸ்டேக் உருவாக்கி அதனை டிரென்டாக்கினர்.

விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் களம் இறங்கினர். இதனால் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க.விற்கு எதிரான கருத்துகள் உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது. மேலும் விஜயை மட்டும் அன்புமணி ஏன் டார்கெட் செய்ய வேண்டும் என்கிற விஜய் ரசிகர்களின் கேள்வி சாமான்ய மக்களை அன்புமணிக்கு எதிராக திருப்பியது. இதனால் சர்கார் விஷயத்தில் சற்று அடக்கி வாசிக்க ஆரம்பித்தார் அன்புமணி.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியிடம், எதற்காக சர்கார் படத்தை மட்டும் குறிவைக்கிறிர்கள் என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். இதற்கு ஆக்ரோசமாக பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் தனது தம்பி மாதிரி என்றும் அவருக்கு புகைபிடிப்பதால் புற்று நோய் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே எதிர்ப்பதாக வித்தியாசமான ஒரு பதிலை கூறிவிட்டு சென்றார் அன்புமணி. வழக்கமாக நடிகர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் அன்புமணி, இந்த முறை விஜய்க்கு எதிராக வார்த்தைகளை பயன்படுத்தாததற்கு விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் மேற்கொண்ட டிரென்டிங் தான் காரணம் என்று கூறப்படுகிறது.