சென்னையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக தேமுதிக இன்று முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.  

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 மக்களவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க முன் வந்தது. இதனை தேமுதிகவும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் உடன்பாட்டில் கையெழுத்திட தேமுதிக தாமதமாக்கி வருகிறது. நேற்று முன் தினம் விஜயகாந்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

சுமார் 50 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பில், கூட்டணி தொடர்பாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இடம்பெற வேண்டும் என பாஜக தலைமை விரும்புவதால், இன்று பிற்பகலுக்குள் கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக நேற்று, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன், விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி இழுபறியை இறுதி செய்வது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கருத்து கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை தேமுதிக இன்று காலை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தேமுதிக தனித்துப்போட்டியிடுகிறதா? அல்லது அதிமுக கூட்டணியில் இணையுமா என்பது இன்றைக்குள் தெரிந்துவிடும். கூட்டணியை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதால் கூட்டணியை நிறைவு செய்ய முடியாமல் தவிக்கும் அதிமுக நிர்வாகிகள் தேமுதிக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.