திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையில் ,  கழுத்தில் ருத்ராட்ச  மாலை ,  நெற்றியில் திருநீற்றுப் பட்டை என உள்ள திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  தமிழ்ப்புலவர் ,  தெய்வப்புலவர் ,  திருவள்ளுவரை பாஜகவினர் இந்து மத அடையாளங்களை புகுத்தி அவரை  இந்துவாக சித்தரிக்க முயற்சிக்கும் நடவடிக்கையில்  இறங்கியுள்ளனர் .  இது தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  பாஜகவின் இம்முயற்சிக்கு  எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் கடந்த  சில வாரங்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் திருவள்ளுவருக்கு  காவிசாயம் பூசி ,  கழுத்தில் ருத்ராட்ச மாலை நெற்றியில் மூன்றுபட்டை ,  குங்குமப்பொட்டு என அவரின் அடையாளங்களை மாற்றி அவரை ஒரு இந்து துறவி போல சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டது இது தமிழகத்தையே கொந்தளிப்படைய  செய்ததது ,  பின்னர் பலத்த எதிர்ப்பின் காரணமாக அந்த புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் இருந்து பாஜக நீக்கியது . இந்நிலையில் அதேபோன்ற ஒரு புகைப்படத்தை இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து கூறியுள்ளார் . இது மிகுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்தப் படத்தை வெங்கைய நாயுடு பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, 

காவி ஆடை அணிந்த திருவள்ளுவர் படத்தை நீக்கும் படியும் ,  தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிடுமாறும்  பலர் டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர் .  இதனையடுத்து மீண்டும் எந்த ஒரு மத அடையாளமும் இன்றி வெண்ணிற உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை வெங்கையாநாயுடு டுவிட்டரில் பதிவிட்டார்.  ஆனாலும் அவர் முதலில் பதிவிட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை நீக்கவில்லை இந்நிலையில் பெரும்பாலான பாஜகவினர் திருவள்ளுவர் ஆடையில்  காவி சாயம் பூசி அதை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர் .