டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களுக்கு சிலர் ஆசை வார்த்தை கூறி வளைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக, தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ. வெற்றிவேல், சென்னையில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு சிலர் ஆசை வார்த்தைகள் கூறி வளைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக அம்மா அணியின் பொது செயலாளர் சசிகலாதான் என்றும், துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்தான் என்றும் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம், பழனி, போஸ் ஆகியோரிடம் கேட்ட பின்புதான் அவர்களுக்கு டிடிவி தினகரன் பொறுப்புகளை வழங்கினார்.

ஆனால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன்னிச்சையாக முடிவுகளை அறிவித்தபோது, இவர்கள் என்ன செய்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதிமுக அம்மா அணிக்கான அனைத்து தொடர்புகளும் டிடிவி தினகரனிடம் தான் உள்ளது. தேர்தல் ஆணைய பிரமாணப் பத்திரங்களில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பெயர்கள்தான் உள்ளது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஆர்.பி. உதயகுமார் நாக்கில் நரம்பில்லாதவர் என்றும், அவர் ஒரு பச்சோந்தி என்றும் கூறினார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடவில்லை என்றும், டிடிவி தினகரனை எதிர்ப்பவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறினார்.