Vetrivel Chennai High Court Conditional Bail!

ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ வெளியிடப்பட்ட விவகாரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள், அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனிடையே ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தது தொடர்பான வீடியோ அல்லது போட்டோவை வெளியிட எதிர்கட்சி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறி வந்தனர். 

எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள் டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

வெற்றிவேலின் இந்த செயல் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், வெற்றிவேல் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர், சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்தார். 

இந்த நிலையில், ஜெ. சிகிச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் புகார் ஒன்றை அளித்தது. ஆளுமுகசாமி விசாரணை ஆணையம் கொடுத்த புகாரில் தான் கைதாகாமல் இருக்க, வெற்றிவேல் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் வெற்றிவேலுக்கு நிபந்தனை அடிப்படையில் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. வரும் 2 வாரம் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.