விவசாய குடும்பத்தில் பிறந்து துணை ஜனாதிபதி ஆனது எனக்கு மரியாதை அளித்துள்ளது  என்றும் மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் அதன் மாண்பை காப்பாற்றுவேன் என்றும் வெங்கய்யா நாயுடு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியும்  போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில், வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றுள்ளார் .வெங்கய்யா நாயுடு 516 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றனர்.

இந்நிலையில், விவசாய குடும்பத்தில் பிறந்து துணை ஜனாதிபதி ஆனது எனக்கு மரியாதை அளித்துள்ளது என வெங்கய்யா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும்  மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் அதன் மாண்பை காப்பாற்றுவேன் என்றும்   குடியரசு தலைவரின் கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன் என்றும்  அவர் கூறியுள்ளார்.

கட்சி அளவில், வேட்பாளராக எனக்கு ஆதரவு அளித்த ஒவ்வொரு எம்.பி.க்கும் பணிவுடன் தனது நன்றியினை தெரிவித்து கொள்வதாகவும், தனக்கு ஆதரவளித்த கட்சியினருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என வெங்கய்யா நாயுடு  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.