பிரதமர் மோடியின் ஆட்சேபத்திற்குரிய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நீக்கினார். 

மாநிலங்களவை துணை தலைவர் குரியனின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்பி ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் ஹரிபிரசாத்தும் போட்டியிட்டனர். 

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். இதையடுத்து ஹரிவன்ஷுக்கு வாழ்த்து தெரிவித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, ஹரிபிரசாத் குறித்து சில கருத்துகளை பேசியதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

மேலும் பிரதமராக இருந்துகொண்டு இப்படி பேசுவது சரியல்ல என்று மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சை, அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார் மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடு.

பிரதமரின் பேச்சு, அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது என்பது சாதாரணமாக நடக்கும் காரியமல்ல. அரிதினும் அரிதாக நடக்கக்கூடிய சம்பவம். அந்த வகையில், சர்ச்சைக்கு உள்ளானது பிரதமரின் பேச்சாக இருந்தாலும் அதிரடியாக அவைக்குறிப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் வெங்கையா நாயுடு.