venkaiah naidu and pon radhakrishnan Threaden to Edapadi palanisamy govt

’இந்த ஆட்சியை கலைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை!’ என்று நேற்று வெங்கய்யாவும், இன்று பொன்னாரும் வாலண்டியராக திருவாய் மலர்ந்திருப்பதை மிரட்சியுடன்தான் பார்க்கிறது எடப்பாடி அரசாங்கம்!...

நின்று போன அரசு இயந்திரம், தொடர் மக்கள் போராட்டங்கள், ‘நாங்கள் சங்கம் துவங்கினால் என்ன தவறு?’ என்று வாட்ஸ் ஆப் வழியே உரிமைக்குரல் கொடுக்குமளவுக்கு எல்லை தாண்டும் காவல்துறை, தடைசெய்யப்பட்ட போதை பாக்கு விற்பனையில் கமிஷன் பெற்று மஞ்சக்குளித்து சிக்கிய காவல்துறை உயரதிகாரிகள், பெரும்பான்மை இழக்கப்போவது இன்றா அல்லது நாளையா எனுமளவுக்கு ஆளும் கட்சிக்குள்ளேயே அணி வெடிப்புகள், இந்த மாநிலத்தில் விற்பனையாகும் தனியார் பாலில் உயிருக்கு தீங்கான கலப்படம் இருக்கிறது என்று சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரே வெளிப்படையாக வெடிப்பது, காலையில் எழுந்ததும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு சென்றுவருமளவுக்கு சுகாதார துறை அமைச்சரின் அசுத்தமாகி கிடப்பது என்று தள்ளாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

அரசியல் வாளெடுத்து வீச வேண்டிய எதிர்கட்சிகளோ , கிஞ்சிற்றும் பொறுப்பில்லாமல் வெறும் குச்சியை எடுத்து ஆடுடா ராமா! ஆடுடா ராமா! என்று ஜனநாயகத்தை குரங்காக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தமிழக அரசின் அசட்டுத்தனங்களை பார்த்து மத்திய அரசே அவ்வரசை கலைத்துவிடுமோ? என்று தேசமெங்கும் இருந்து அரசியல் பார்வையாளர்கள் கணிக்க துவங்கினர். குடியரசு தலைவர் நெருங்கி வரும் நிலையில் அ.தி.மு.க.வின் கையிலிருக்கும் அதிகப்படியான வாக்குவங்கிக்காக வெயிட் செய்யும் மோடி, தேர்தல் முடிந்ததும் நிச்சயம் தமிழக ஆட்சியை கலைத்துவிடுவார் என்று ஜோஸியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்நிலையில் நேற்று சென்னை விமானநிலையத்தில் வெங்கய்யா நாயுடு ‘ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை கலைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.” என்று கூறினார்.

இன்று கோவையில் பேசியிருக்கும் பொன்னாரும் ’இந்த அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இல்லை. தமிழ்நாட்டில் அமைதியான சூழல் நிலவ வேண்டும்.” என்றும் சொல்லியிருக்கிறார்.

மத்திய அரசின் இரு முக்கிய அமைச்சர்களும் அடுத்தடுத்த நாட்களில் இப்படி வாலண்டியராக ஒரே கருத்தை பேசுவதன் உள்ளர்த்தம் “உங்கள் போக்கை தெளிவாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஜனாதிபதி தேர்தலுக்கு பின் நாங்கள் நினைத்தால் உங்கள் ஆட்சியை கலைத்துக் கட்டிவிடுவோம்.

அந்த அதிகாரமும், திறமையும், அப்படியொரு சூழலை உருவாக்கும் சாமர்த்தியமும் எங்களுக்கு இருக்கிறது. அப்படியொரு நிலையை எடுக்க இப்போது வரை விரும்பவில்லை. ஆனால் அதை செய்ய எங்களை தூண்டிவிடாதீர்கள்.” என்று தங்களை மறைமுகமாக பா.ஜ.க. மிரட்டுகிறதோ என்று பழனிசாமி அண்ட்கோ இப்போது படபடப்பாகி இருக்கிறது.

அதே நேரத்தில் மத்திய அமைச்சர்களின் இந்த கருத்தை எடுத்து விமர்சிக்கும் அரசியல் நடுநிலையாளர்கள் “வயசுக்கு வந்துட்ட பொண்ணு ‘எனக்கு மாப்பிள்ள பார்க்காதீங்க, எனக்கு கல்யாணம் வேண்டாம், எனக்கு மேரேஜ் பிடிக்கல!’ அப்படின்னு தொடர்ந்து சொல்வதெல்லாம் ‘நான் மேரேஜுக்கு ரெடி’_ன்னு சொல்லாம சொல்றதுதானே. அதையேதான் வெங்கியும், பொன்னியும் தமிழ்நாட்டுல பேசிட்டு இருக்காங்க.” என்று குறும்பாக விளக்கவுரை கொடுத்திருக்கிறார்கள்.

இது எப்டியிருக்கு!?