Asianet News TamilAsianet News Tamil

மாநில உரிமைகளை பறித்து பச்சை துரோகம் செய்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு..! கொதிக்கும் வேல்முருகன்..!

இந்தி பேசும் மாநிலத்தவர்களாகப் பார்த்து தமிழ்நாட்டில் வேலைக்கமர்த்துவதைத் திட்டமிட்டுச் செய்துவருகிறது ரயில்வே வாரியம். இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இப்போது, ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்று அறிவித்திருப்பது அகம்பாவத்தின் உச்சமாகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேநேரம் எச்சரிக்கையும் விடுக்கிறோம்.

velmurugan slams central government for boycotting tamil in railway exams
Author
Madurai, First Published Mar 8, 2020, 5:08 PM IST

ரயில்வே துறைத் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்வேறு மொழி இன தேசியங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி நாடுதான் இந்தியா. ஆனால் இதை ஓர் ஒற்றையாட்சி நாடாகவே பாவிக்கிறது ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு. அந்த ஒற்றையாட்சி இந்தி மொழியின் வழியிலானதாக இருக்கிறது. அதனால் இந்திக்கு மட்டுமே தேசிய மொழிக்கான அங்கீகாரத்தை அளித்து, ஒன்றிய அரசுத் துறைத் தேர்வுகளையெல்லாம் இந்தி மற்றும் தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகியவற்றில்தான் நடத்துகிறது.

velmurugan slams central government for boycotting tamil in railway exams

இதற்கு தபால் துறை மட்டும் விதிவிலக்கு. ஏனென்றால், தபால் துறையில் மாநில மொழிகளைப் புறக்கணித்தபோது, திமுக சார்பில் வழக்குப் போடப்பட்டு, 'தபால் துறைத் தேர்வுகள் இனி தமிழில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தது ஒன்றிய அரசு. ஆனால் ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள் (GDCE) அனைத்தையும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை; அது ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாத்திரமே நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதோடு, இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது என்று ஆணவத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

velmurugan slams central government for boycotting tamil in railway exams

குரூப்-சி பதவிகளுக்கான தேர்வுகள் தொடர்பாக தென் மேற்கு ரயில்வே பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் சந்தேகங்களை கேள்விகளாகத் தொடுத்தனர்: “ஆங்கிலத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தவர், இந்தி மொழியில் சில கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் அந்தத் தேர்வுத்தாளைத் திருத்தலாமா? அப்படி திருத்தலாம் என்றால் எவ்வளவு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்? ஏற்கனவே விருப்பம் தெரிவித்த ஆங்கிலத்தில் எழுதியுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்கள் போட வேண்டுமா அல்லது இந்தியில் பதிலளித்துள்ள கேள்விகளுக்கும் சேர்த்து அனைத்து கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் போட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ரயில்வே வாரியம் அளித்த பதில்: “விருப்பம் தெரிவித்த ஆங்கிலம் தவிர, வேறு மொழியில் கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் அந்த கேள்விகளுக்கு மதிப்பெண் போட வேண்டியதில்லை” என்று பதிலளித்தது. ஆனால் இதற்கு அடுத்த வரியில், “இந்தியில் எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் எழுதியிருந்தால் அதற்கு மதிப்பெண் போட வேண்டும்” என்று கூறியது.

velmurugan slams central government for boycotting tamil in railway exams

அதாவது சுற்றிவளைத்து சூசகமாகப் பதில் கூறியது. அப்படிக் கூறியும் ரயில்வே வாரியத்தால், இந்திக்கு மட்டுமே வக்காலாத்து வாங்கும் தன் கெட்ட எண்ணத்தை மறைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதேசமயம் தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்றும் ரயில்வே வாரியம் அறிவித்திருக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்குச் செய்யும் வஞ்சகம், பஞ்சமா பாதகம், பச்சைத் துரோகமே ஆகும். ஏற்கனவே இந்தி பேசும் மாநிலத்தவர்களாகப் பார்த்து தமிழ்நாட்டில் வேலைக்கமர்த்துவதைத் திட்டமிட்டுச் செய்துவருகிறது ரயில்வே வாரியம். இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இப்போது, ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்று அறிவித்திருப்பது அகம்பாவத்தின் உச்சமாகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேநேரம் எச்சரிக்கையும் விடுக்கிறோம்.

velmurugan slams central government for boycotting tamil in railway exams

அந்த எச்சரிக்கையாவது: ஒரு கூட்டாட்சி நாடு (அரசு) என்றால், பல்வேறு தேசிய இன தன்னாட்சி அரசுகளின் கூட்டாட்சி என்றும்; இந்தத் தன்னாட்சித் தேசிய இன அரசுகள் இன்றிக் கூட்டாட்சி, அதாவது ஒன்றிய அரசு இருக்க முடியாது என்றுமே பொருள்படும். இதில் ஒன்றிய அரசிடம் தேசப் பாதுகாப்பு மற்றும் நாணயம்-கரன்சி அச்சிடல் துறைகள் மட்டுமே இருக்கும்; மீதி துறைகள் அனைத்தும் தன்னாட்சித் தேசிய இன அரசுகள் (நாடுகள்) வசமே இருக்கும். இத்தகைய கூட்டாட்சித் தத்துவம்தான் அறிவியல் அரசியலாகும். ஆனால் இதை முற்றாகவே தலைகீழாக்கும் வேலையை, அதாவது மாநில உரிமைகளைப் பறிக்கும் வேலையைத்தான் செய்துவருகிறது ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு. அப்படியான வேலைகளில் ஒன்றுதான் ரயில்வே துறைத் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறக்கணிப்பதும் ஆகும்.

இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios