அயோத்தி சாமியார் உள்ளிட்ட எந்த கொம்பனாலும் உதயநிதி சுண்டு விரலைக் கூட தொட முடியாது- சீறும் வேல்முருகன்
சனாதன பேச்சு தொடர்பாக தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடும் அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மோடி அரசால் மக்கள் பாதிப்பு
அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளை கண்டனம் தெரவித்து வரும் நிலையில், உதயநிதிக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி போன்ற நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கையாலும், இலட்சக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடியாலும், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் அதீத வளர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தெருவில் பிச்சை எடுக்கக் கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
உதயநிதி தலைக்கு 10 கோடி விலை
இச்சிக்கல்களை பற்றியெல்லாம் கவலைப்படாத மோடி கும்பலுக்கு, மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சனாதனம் குறித்து பேசி இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.இது ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு எதிரான கருத்து தெரிவித்ததற்காக, உதயநிதி அவர்களின் தலையை சீவினால், 10 கோடி ரூபாயை அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் அறிவித்திருக்கிறார். அதாவது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சனாதனத்தில் பிறப்பின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வு, தீண்டாமை குறித்து பேசியது, சனாதன கும்பல்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல்கள் பொய் பிரச்சாரம்
சனாதனத்தில் நிலவும் மநு நீதி, வர்ணாசிரமம், சாதிய மேலாதிக்கம், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிராக பேசியதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சனாதன கும்பல்கள் விமர்சித்து வருகின்றன. இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் 10 கோடி ரூபாயை அறிவித்திருக்கிறார் . அதோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்து மதத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த மோசடி கும்பலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதாவது, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த இது ஒன்றும் வடமாநிலங்கள் அல்ல; தமிழ்நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், இங்கு பகுத்தறிவாளர்களை விட, சித்தர்கள், ராமானுஜர், வள்ளலார், வைகுண்டசாமிகள் போன்ற ஆன்மிகவாதிகளே, சனாதன கருத்தியலுக்கு எதிரான கருத்தியலை காலம் காலமாக நடத்தி வந்துள்ளனர்.இந்து மக்களிடையே நிலவும் வர்ணாசிரம மேலாதிக்கத்தை - பார்ப்பனிய ஆதிக்கத்தை நீக்கி இந்து மக்கள் அனைவரையும் சம உரிமை படைத்த சகோதரர்களாக மாற்றும் நோக்கம், பாஜக- ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்
தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லியும் பாடியும் அர்ச்சனை செய்யலாம் என்ற தமிழ் மொழி உரிமைக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமைகள் முன்முயற்சி எடுக்கப் போவதில்லை. மாறாக அவ்வாறான தமிழர் முயற்சிகளைத் தடுக்கவே அவை முன்வரும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். எனவே, வர்ணாசிரம மேலாதிக்கத்தை இக்காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள் நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க கும்பலுக்கு தமிழ்நாட்டின் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா உள்ளிட்ட எந்த கொம்பனாலும், அமைச்சர் உதயநிதி அவர்களின் சுண்டு விரலைக் கூட தொட முடியாது.
சாமியாரை கைது செய்யுங்கள்
நாட்டில் நிலவி வரும் பெரும் சிக்கல்களை எல்லாம் திசை திருப்புவதையும், பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதையும் கைவிட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க, மோடி அரசை, ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க கும்பல்கள் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும்,
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களின் தலைக்கு, 10 கோடி ரூபாய் அறிவித்துள்ள அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை உடனடியாக கைது செய்ய, ஒன்றிய பாஜக அரசு முன் வர வேண்டும். ஒரு சாமியாரிடம் எப்படி 10 கோடி ரூபாய் இருக்கிறது என்பது குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
அயோத்தி சாமியார் பேச்சு வன்முறையல்ல! மனம் வெதும்பி பேசிவிட்டார்: செல்லூர் ராஜூ