காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு, கடந்த 29 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் வரையில் அமைதி காத்துவிட்டு, ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு நாடியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை எதிர்த்தும் இன்று (ஏப்.1) சுங்கச்சாவடிகள் முற்றுகைப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். 

அதன்படி, இன்று காலை 11 மணியளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உறுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். திடீரென அவர்கள், தாங்கள் வைத்திருந்த கட்சி கொடியைக் கொண்டு சுங்கச்சாவடியை தாக்கினர். இதனால் பயந்துபோன சுங்கச்சாவடி ஊழியர்கள், தலைதெறிக்க ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்..