வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது 3-வது சுற்று முடிவில் அதிமுக கூட்டணி வேட்பாளர் 85,200 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 77,467 வாக்குகள் பெற்றுள்ளனர். 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலின்போது, தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,553 வாக்குச்சாவடிகளில், தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் இந்தத் தொகுதியைச் சேர்ந்த 6,088 பேருக்கு மின்னணு தபால் வாக்குகளும், 1,026 போலீசாருக்கு தபால் வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஏ.சி. சண்முகம் முன்னிலையில் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து எண்ணப்பட்டு வந்த முதல் சுற்று வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 21,660, திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 21,177, நாம் தமிழர் வேட்பாளர் தீபலட்சுமி 400 வாக்குகள் பெற்றுள்ளன. முதல் சுற்றுக்கள் முடிவில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். 

அதேபோல் 2-வது சுற்றுகள் வாக்குகள் எண்ணிக்கையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 61,789 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 58,645 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 3,153 வாக்குகள் பெற்றுள்ளனர். ஏ.சி. சண்முகம் 3,153 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 

இந்நிலையில், 3-வது சுற்று சுற்றுகள் வாக்குகள் எண்ணிக்கையில் ஏ.சி. சண்முகம் 85,200 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 77,467 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 3,950 வாக்குகள் பெற்றுள்ளனர். ஏ.சி. சண்முகம் தொடர்ந்து 7,733 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை இருந்து வருகிறார். வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகிறது.