வேலூர் மக்களவை தேர்தலில் கடுமையான போட்டிகளிடையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சுமார் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து, வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக திமுக மாற்றியுள்ளது. 

வேலூர் மக்களவை தேர்தலில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்ததால் கடுமையான போட்டி நிலவியது. 

இதனையடுத்து, 12-ம் சுற்று வரை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். அடுத்து வந்த அனைத்து சுற்றுகளிலேயே கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். 

இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்றனர். சுமார் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனி வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். வேலூர் வெற்றியை அடுத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது.