வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதியில் மே 19 அன்று தேர்தலை நடத்த அந்தத் தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மேற்கொண்ட முயற்சிக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகப் பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களிலிருந்து 11.53 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்தப் பணத்தை வேலூர் தொகுதியில் பிரித்துகொடுப்பதற்காக வார்டுகள் வாரியாக வைத்திருந்த பட்டியல்களும் கிடைத்தன. இதன் காரணமாக தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பு வாக்குப்பதிவை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
ஆனால், புகாருக்கு ஆளான திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்துவிட்டு உடனே தேர்தலை நடத்த வேண்டும்மென ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. தேர்தல் ரத்தானதால் கண்ணீர்விட்ட ஏ.சி.சண்முகம், டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துவிட்டு வந்தார். வேலூர் தொகுதிக்கு கடைசி கட்டமாக மே 19 அன்று  தேர்தலை நடத்த வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். தலைமை தேர்தல் அதிகாரியைக் காத்திருந்து இந்த மனுவை அளித்துவிட்டு வந்தார் ஏ.சி.சண்முகம்.


ஆனால், மனு அளித்த பிறகு அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை நேற்று சந்தித்த ஏ.சி.சண்முகம், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த விவரங்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். வேலூர் தேர்தல் தொடர்பாக அரை மணி நேரத்தில் பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது எனவும் தெரிவித்தார். ஆனால், ஏ.சி.சண்முகம் எதிர்பார்த்தது போல எந்தப் பதிலும் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஏ.சி.சண்முகத்துக்கு வரவில்லை.
தற்போதைய நிலையில், வேலூரில் கடைசி கட்டத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், புதிய அறிவிக்கை வெளியிட்டுதான் தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். மே 19-ல் நடைபெற உள்ள தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே வேலூரில் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. ஏ.சி.சண்முகம் எடுத்த முயற்சிகள் எதுவும் அவருக்கு பலன் கொடுக்கவில்லை.