வாழ்வா சவா..?? என்ற அளவிற்கு வேலூர் தொகுதியில் அதிமுக திமுகவுக்கு இடையே யுத்தம் நடந்து முடிந்துவிட்டது. டி-20 கிரிக்கெட் போல நிமிடத்திற்கு நிமிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்து மிகுந்த சுவாரசியத்தோடு சென்றது வாக்கு எண்ணிக்கை.

முதல் 7-வது சுற்று வரை அதிமுகவின் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அசைக்க முடியாத முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால், 7-வது சுற்றில் இருந்து 21-வது சுற்று வரை ஒரே மாதிரியான வாக்குகளை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அள்ளி குவித்தார். இதை தொலைக்காட்சி மூலமாகவும், அரசு அதிகாரிகள் மூலமாகவும் தொடர்ந்து பார்த்தும் கேட்டு வந்தும் எடப்பாடி பழனிச்சாமி, ஒருக்கட்டத்தில் உச்சக்கட்ட டென்சனாகிவிட்டாராம். 

வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியில் எப்படி ஓட்டிகள் குறைந்தது என்பது தான் எடப்பாடியின் கேள்வியாக உள்ளது. தற்போது வாணியப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமைச்சர் நிலோபர் கபில் ஆவார். ஒரு பெண்ணாக தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இறங்கி வேலை பார்த்துவிட்டாராம் நிலோபர் கபில். 

ஆனால், பிரச்சனை அது அல்ல. தேர்தல் அறிவிக்கும் முன்பே மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சரான வீரமணி சுணக்கம் காட்டினார் என்பது தான் இங்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. வீரமணியின் இந்த செயல்பாடு குறித்து ஏற்கனவே ஏ.சி.சண்முகம் எடப்பாடி மற்றும் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உதவியாளரிடம் குமுறி தள்ளிவிட்டாராம். 

இதன் தொடர்ச்சியாகத்தான் உளவுத்துறையின் ரிப்போர்ட்டை தெரிந்துகொண்ட முதல்வர் எடப்பாடி. வீரமணி தனது பக்கத்து தொகுதிக்கு பொறுப்பாளராக போடாமல் கே.வி.குப்பத்திற்கு தூக்கி அடித்தாராம். வேலுமணியின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஏதாவது வேலை செய்வார் என்பதால் அவருடன் பணியாற்ற சொல்லி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். 

மேலும், வாணியப்பாடி தொகுதியை பொறுத்த வரை கே.சி.வீரமணியில் குளறுபடியால் தான் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை பொறுப்பாளராக போட வேண்டிய நிலைக்கு முதல்வர் தள்ளப்பட்டார். அதிமுக இருக்கும் அமைச்சர்களில் எப்போதும் பொறுமையாக இருக்கும் கே.பி.அன்பழகன் தனது பங்கிற்கு முடிந்த அளவு களத்தில் இறங்கி தீவிரமாக வேலை பாரத்து வந்தார். ஆனால், மண்ணின் மைந்தரான அமைச்சர் வீரமணி களத்தில் ஈடுபாட்டோடு களத்தில் இறங்கி அடித்திருந்தால் 20 ஆயிரம் ஓட்டுகளை இழந்திருக்கமாட்டோம் என்பது எடப்பாடியின் எண்ணமாகும். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே வேறு திசையில் பயணிக்கும் வீரமணிக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க உள்ளார்.