வேலூரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு வருமாறு திருமாவளவனுக்கு அழைப்பு செல்லாதது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வென்ற தெம்போடு வேலூரில் களம் இறங்கியுள்ளது திமு.க துவக்கத்தில் தேர்தல் பணிகளில் திமுக தரப்பு சுணங்கி இருந்தது. ஆனால் ஸ்டாலின் வந்து சென்ற பிறகு பணிகள் சுறுசுறுப்பானது. இதே போல் உதயநிதியும் வேலூரில் முகாமிட்டு தேர்தல் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டு வருகிறார். இதனால் திமுக தரப்பு உற்சாகமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறது. 

பணப்புழக்கமும் கூட எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உள்ளது. ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்டை அந்த முன்னாள் மத்திய அமைச்சர் கச்சிதமாக முடித்துவிட அதிமுக தரப்புக்கு தற்போது திமுக டஃப் பைட் கொடுத்து வருகிறது. ஆனால் பிரச்சாரம் என்று வந்தால் திமுக தலைகள் தான் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர். வேலூரில் வலுவாக உள்ள விசிக நிர்வாகிகள் கூட பிரச்சாரத்தில் ஒதுங்கியே உள்ளனர். 

ஒரு சில இடங்களுக்கு மட்டுமே விசிக பிரமுகர்கள் பிரச்சாரத்திற்கு அழைக்கப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் அழையா விருந்தாளிகளாக கூட்டணி தர்மத்திற்காக விசிக பிரமுகர்கள் பிரச்சாரங்களில் கலந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. தேர்தல் பிரச்சாரமே ஓய உள்ள நிலையில் தற்போது வரை திருமாவளவன் வேலூரில் பிரச்சாரம் செய்ய வில்லை. இது குறித்து கேட்ட போது திமுக தரப்பில் இருந்து அழைப்பு இல்லை என்று விசிக தரப்பில் இருந்து பதில் கிடைத்தது. 

இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திருமாவளவன் எந்த தொகுதியிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை. இதே போல் வைகோவையும் கூட குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே திமுக பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது. அதன் அடிப்படையில் வேலூரில் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வேண்டாம் என்று முடிவெடுத்து அதன் அடிப்படையில் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த தலைவர்களையும் அழைக்கவில்லை என்கிறது திமுக தரப்பு.