யாரும் எதிர்பாராத வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதியை குறிப்பிட்டு முதலமைச்சர் பேசியது திமுக தரப்பிற்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழகத்தின் கடந்த கால அரசியலை எடுத்துக் கொண்டால் பெரும் தலைவர்களாக இருப்பவர்கள் அவருக்கு நிகரானவர்களாக கருதப்படும் தலைவர்களின் பெயரை மட்டுமே பயன்படுத்தி அரசியல் செய்வார்கள். உதாரணத்திற்கு ஜெயலலிதா தீய சக்தி கருணாநிதி என்று தான் பிரச்சாரம் செய்வார். ஒரு கட்டம் வரை ஜெயலலிதா ஸ்டாலின் பெயரை விமர்சனத்திற்கு கூட பயன்படுத்த மாட்டார். கருணாநிதியின் வாரிசு என்று கூறித்தான் விமர்சிப்பார்.

 

ஸ்டாலினை விமர்சித்து அவருக்கு விளம்பரம் தேடிக் கொடுத்துவிடக்கூடாது என்பது தான் ஜெயலலிதாவின் எண்ணம். 2016 தேர்தலின் போது தான் முதல் முறையாக ஸ்டாலின் பெயரை கூறி விமர்சித்தார் ஜெயலலிதா. ஏனென்றால் அப்போது திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது. இதே போல் சாகும் வரை ஜெயலலிதா விஜயகாந்த் பெயரை உச்சரித்ததே இல்லை. இதே போல் கலைஞரும் கூட ஜெயலலிதாவை விமர்சித்துள்ளார்.

 

ஆனால், அதிமுகவின் பிற நிர்வாகிகள் மீதான விமர்சனம் என்றால் அதற்கு தனியாக ஆள் வைத்திருப்பார். ஜெயலலிதாவை போலவே கலைஞரும் கூட விஜயகாந்த் பெயரை வெளிப்படையாக கூறி விமர்சிப்பது கிடையாது. தற்போது ஸ்டாலினை எடுத்துக் கொண்டால் விஜயகாந்த், சீமான், ரஜினி, அன்புமணி உள்ளிட்ட தனது போட்டியாளர்கள் என்று கருதுபவர்கள் பெயரை பயன்படுத்துவதில்லை.

அந்த வகையில் அண்மையில் தீவிர அரசியல் களத்திற்கு வந்த உதயநிதியையும் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் தன்பாட்டிற்கு தனி டிராக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று வேலூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரும் எதிர்பாராத வகையில் உதயநிதியை குறிப்பிட்டு விமர்சனங்களை முன் வைத்தார். 

திமுகவின் தலைவர் ஆக வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகவே உதயநிதியை படத்தில் நடிக்க வைத்ததாக எடப்பாடி கூறினார். மேலும் பல விமர்சனங்களையும் அவர் முன் வைத்தார். இது திமுக தரப்புக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நேற்று அரசியலுக்கு வந்த உதயநிதி குறித்து எடப்பாடி பொதுக்கூட்ட மேடையில் பேசியது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் இருந்துள்ளது. இதன் மூலம் உதயநிதியின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்துவது தெரிவதாக திமுக தரப்பு கூறுகிறது. 

தாக்கத்தை ஏற்படுத்துவதால் தான் முதலமைச்சரே உதயநிதியை விமர்சித்து பேசியுள்ளதாகவும் அவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் பல்வேறு ஊடகங்கள் மற்றும் இணையதள செய்தி நிறுவனங்கள் உதயநிதி குறித்து முதலமைச்சர் பேசியதை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலமாக தங்களுக்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளதாக உற்சாகத்தில் இருக்கிறது உதயநிதி டீம்.