வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் நிவாரண  உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.சி.வீரமணி, அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசும் போது தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கவில்லை என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்படுகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ. விளம்பரத்திற்காக பேசியது தவறு என்றார். இதில் எம்.எல்.ஏ. நந்தகுமாருக்கும், அமைச்சர் வீர மணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆவின் தலைவர் வேலழகன், எம்.எல்.ஏ. பேசிக்கொண்டிருந்த மைக் சுவிட்சை அணைத்தார். அதற்கு எம்.எல்.ஏ. ஒருமையில் பேசியதால் மேடையில் இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பாக இருந்தது. அமைச்சர் மற்றும் கலெக்டர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் ஆவின்தலைவர் வேலழகனை மேடையை விட்டு இறங்குமாறு கூச்சலிட்டனர். அப்படி இல்லையென்றால் அணைக்கட்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபுவை மேடையில் ஏற்றுங்கள் என்றனர்.

உடனே பாபு மேடையில் ஏற முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மேடையில் ஏற அனுமதி கொடுக்கவில்லை. உடனே மேடையில் இருந்த தி.மு.க. தொண்டர் ஒருவர் துணை போலீஸ் சூப்பிரண்டை பிடித்து கீழே தள்ளினார். சுதாரித்து கொண்ட அவர் அந்த தொண்டரை தாக்கினார். பின்னர் போலீலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.