வேலூர் மக்களவை தொகுதியில் அமமுக போட்டியிடாது என பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். 

பணப்பாடுவாடா புகாரால் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பில் புதிநீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றன

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விருத்தாச்சலத்தில் பேட்டியளித்தார். அதில், அமமுக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து இருப்பதாகவும், எனவே சுயேட்சையாக போட்டியிட வேண்டாம் என்று கட்சியின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். இதன் காரணமாக வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடப் போவதில்லை என்றும் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். 

வேலூர் மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்பட இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும், ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடுவது சிக்கலாக இருக்கலாம். எனவே கட்சியை பதிவு செய்து நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தேர்தலில் போட்டியிடு உள்ளோம் என டிடிவி. தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.