இன்று வேலூரில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் நேற்று அத்தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அத்திவரதரை தரிசித்து திரும்பியிருப்பது பேசு பொருள் ஆகியுள்ளது.

திமுக பகுத்தறிவு இயக்கம் என்று தன்னை சொல்லிக் கொள்ளும். ஆனால் திமுகவில் இருப்பவர்கள் கோவில் கோவிலாக ஏறி இறங்குவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். கலைஞர் இருந்த வரை திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் கோவில்களுக்கு சென்று திரும்புவது என்பது மிகவும் ரகசியமாக இருக்கும். ஜெகத்ரட்சகன் கூட கோவில்களுக்கு சென்று திரும்புவது பத்திரிகைகளில் வராமல் பார்த்துக் கொள்வார். 

இந்த அளவிற்கு கலைஞர் திமுகவை வழிநடத்தி வந்தார். ஆனால் அவரது கடைசி கால கட்டத்தில் அனைத்தும் மாற ஆரம்பித்தது. கலைஞர் உடல் நலன் திரும்ப வேண்டி திமுகவினர் கோவில் கோவிலாக சிறப்பு வழிபாடுகளில் கூட ஈடுபட்டனர். இதனை விமர்சித்து திக தலைவர் வீரமணி அறிக்கை வெளியிடும் அளவிற்கு சென்றது. பிறகு கலைஞர் மறைவை தொடர்ந்து திமுகவில் உயர்மட்ட நிர்வாகிகள் வெளிப்படையாக கோவில்களுக்கு சென்று திரும்பினர்.  

அதிலும் திமுகவின் மிக முக்கிய நிர்வாகியான கே.என் நேரு அத்திவரதரை தரிசித்துவிட்டு திரும்பியதை ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்தார். இதற்கெல்லாம் திமுகவில் அனைத்து நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இடம் உள்ளது என்று அக்கட்சி தலைமை விளக்கம் அளித்தது. இந்த நிலையில் தான் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் திமுகவிற்கு ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. 

வேலூரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அனைவரது கவனமும் அந்த தொகுதியின் வேட்பாளர்கள் மீது இருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திமுக வேட்பாளரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அத்திவரதர் தரிசனத்திற்கு சென்று வந்துள்ளார். இது திமுகவை நோக்கி பலரும் பலவித கேள்விகளை முன் வைக்க வாய்ப்பாகிவிட்டது. 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள கதிர் ஆனந்த் திமுக எப்போதும் தனது பாதையில் செல்வதாகவும் ஆனால் தான் தனது தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் கோவிலுக்கு சென்று வந்ததாக விளக்கம் அளித்திருந்தார். ஆனால் தேர்தலுக்கு முதல் நாள் கதிர் ஆனந்த் அத்திவரதரை பார்த்துவிட்டு திரும்பியிருப்பது திமுக தலைமையை அதிருப்தி அடையவும் அதிரவைக்கவும் செய்துள்ளது.