திமுக கூட்டணியில் வேலூர் தொகுதி தங்களுக்குக் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளது.

திமுகவின் நீண்ட நாள் கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இந்தக் கட்சிக்கு வழக்கமாக நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியை ஒதுக்குவது திமுகவின் வாடிக்கை. உதயசூரியன் சின்னத்தில்கூட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட்டிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை உறுதிப்படுத்திவிட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், வேலூர் தொகுதியை மீண்டும் கேட்கும் திட்டத்தில் உள்ளது. 

ஆனால், திமுகவின் பொருளாளராக உயர்ந்துவிட்ட துரைமுருகன், தன் மகனுக்காக வேலூர் தொகுதியைக் கேட்க உத்தேசித்திருப்பதால், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே வேலூர் தொகுதியை துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்துக்காகக் கேட்டார். அதற்காகப் பலவித முயற்சிகளையும் துரைமுருகன் மேற்கொண்டார். ஆனால், அன்றைய திமுக தலைவர் கருணாநிதி, துரைமுருகனை சமாதானப்படுத்தி, வேலூர் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிடம் வழங்கிவிட்டார் என்று கூறப்பட்டது.

 

இப்போதும் வேலூர் தொகுதியை தனது மகனுக்காகக் கேட்க துரைமுருகன் காய் நகர்த்திவருவதாக திமுகவினர் சொல்கிறார்கள். இப்போது திமுகவின் பொருளாளராகவும் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருப்பதால் வேலூர் தொகுதி கதிர் ஆனந்துக்குக் கிடைக்கும் என்று அடித்து சொல்கிறார்கள் திமுகவினர். இப்படி வரும் தகவல்களால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆடிப்போயிருக்கிறது. 

இதனால், வேலூர் தொகுதி தங்களுக்குக் கிடைக்குமா என்ற பட்டிமன்றம் அந்தக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நடந்து வருகிறது. இன்னொரு புறம் வேலூர் தொகுதி கிடைக்காவிட்டால், வேறு எந்தத் தொகுதியைக் கேட்கலாம் என்ற ஆலோசனையிலும் அக்கட்சி மூழ்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவராக இருக்கும் துரைமுருகன் தலைமையிலான குழு, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தும்போது, உண்மை நிலவரம் தெரிய வரும் என்பதால், அதுவரை அமைதி காக்கவும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.