அதிமுகவில் கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே செல்கிறது. முன்பு எடப்பாடி - ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதையொட்டி இரு அணியினரும் மாறி மாறி டிவி மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தனர்.

அதிமுகவில் எத்தனை அணிகள் உருவாகி இருந்தாலும்,தொண்டர்களை பொறுத்தவரையில் யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பது இதுவரை மேலிடத்துக்கு தெரியாமலேயே இருக்கிறது. இதனால்,தொண்டர்களுக்குள் இந்த நாள் வரை பிளவு ஏற்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் டிடிவி.தினகரன், காலியாக உள்ள சில இடங்களுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்தார். இதனால், புதிய பொறுப்பு கிடைத்ததும், ஆனந்தம் அடைந்தவர்கள், டிடிவி.தினகரனுக்கு போஸ்டர், பேனர், கட்அவுட் ஆகியவை வைத்து வாழ்த்தும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி.தினகரன் அறிவித்த நியமனம் செல்லாது என கூறினார். மேலும், டிடிவி.தினகரனுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார். இதனால், புதிய பொறுப்புகள் கிடைத்தவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தள்ளனர்.

மேலும், மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளும் டிடிவி.தினகரனை வரவேற்று பல இடங்களில் சுவர் விளம்பரம், போஸ்டர் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளது.

இதுபோன்று டிடிவி.தினகரனை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை அழிக்கும பணியில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எடப்பாடி - டிடிவி.தினகரன் அணிக்களுக்கு இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் மனோகரன், சாருபாலா, கு.பா.கிருஷ்ணன் ஆகியோருக்கு கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பும், இளவரசனுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக திருச்சி மாநகர் முழுவதும் நன்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.‘

அதேபோல், திருச்சி மாநகரில் தினகரன் அழைக்கிறார் என்ற சுவர் விளம்பரமும் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக திருச்சி சுங்கச்சாவடி, பகுதியில் அரசு போக்குவரத்து கழக சுவர்களில், விமான நிலைய பகுதி ஆகிய சுவர்களில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், போக்குவரத்து துறை மேலாண் இயக்குனரை, தொடர்பு கொண்டு டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக எழுதியுள்ள சுவர் விளம்பரம்களை உடனே அழிக்க வேண்டும் என கூறி சத்தம் போட்டுள்ளார்.

அதன்பேரில், அவர் போக்குவரத்து ஊழியர்களை வைத்து சுவர் விளம்பரங்களை அழிக்கப்பட்டது. இதை தடுக்க வந்த அதிமுகவினரிடம், கலெக்டர் உத்தரவுபடி அழிக்கப்படுவதாக கூறி சமாளித்துவிட்டனர்.

இதேபோல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விமான நிலைய பகுதியில் உள்ள சுவர் விளம்பரத்தை அழிக்க ஆட்களை அனுப்பி வைத்தார். அப்போது அங்கு வந்த வட்ட செயலாளர் சுரேஷ், “இது நான் எழுதின சுவர் விளம்பரம். இதை அழிக்க முடியாது” என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உத்தரவு என அதிமுகவினர் கூறியுள்ளனர். யார் சொன்னாலும் அழிக்க முடியாது என கூறிய சுரேஷ், சுவர் விளம்பரத்தின் அருகிலே உட்கார்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையொட்டி வரும் அக்டோபர் 30ம் தேதி திருச்சியில் நடக்க உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான போஸ்டர்களை, வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்கள் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரத்தின் மீது ஒட்டி வருகின்றனர்.

“திருச்சி மாநகர்ல ஒரு இடத்துல டிடிவி.தினகரனுக்கு யாராச்சும் சுவர் விளம்பரம் செய்தா... நானே வந்து அழிப்பேன்…” என அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், அதிகாரிகளை விரட்டியும், மிரட்டியும் வருதாக அதிமுகவினர் பரபரப்பாக பேசுகின்றனர்.

இதற்காக திருச்சி போலீசார், டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் எழுதியது யார் என பட்டியல் ஒன்றை தயாரித்து விசாரித்து  வருகின்றனர்.